வித்யா படுகொலை வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும், வட மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமும் வாக்குமூலங்களை பெறுவதற்காக சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது, அரசதரப்பு சட்டத்தரணி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடந்த முறை இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்குரியவர் தொடர்பில் காணொளி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும், வட மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமும் வாக்குமூலங்களை பெறுவதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த அனுமதி கிடைத்ததும் அவர்களின் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.
அத்துடன், மேலும் நான்கு காவற்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடமும் சாட்சிகள் பெறப்படவுள்ளன.
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது, லலித் ஜயசிங்கவை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.
எனினும் சந்தேக்குரியவர் முக்கியமான பொலிஸ் அதிகாரி என்பதால், அவருக்கு பிணை வழங்கப்பட்டால் அவரால் சாட்சியங்களுக்கும் சான்றுகளுக்கும் தலையீடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அவருக்கு பிணை வழங்கக்கூடாது என அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்த் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.