சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீன் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா என்ற கரிகாலன் படத்தின் தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் எனது உருவாக்கம் ஆகும். அதை தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து காலா என்ற கரிகாலன் என்ற படத்தை எடுத்து வருகின்றனர். எனவே, காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் நேற்று அதே கோர்ட்டில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மனுதாரர் காப்புரிமை சட்டத்தின் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
காப்புரிமை சட்டத்தின் கீழ் இந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இயலாது. இதுபோன்ற மனுக்களை ஐகோர்ட்டில் தான் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, மனுதாரரின் மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு, மனுதாரர் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.