பிறந்த குழந்தைகளின் ஆடைகளைச் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம். குழந்தைகளின் சருமம் மிகமிக மென்மையானது. அவர்களுடைய ஆடைகள் சரியான முறையில் பராமரிக்காமல் இருந்தால், சருமத்தில் அலர்ஜி உண்டாகும்.
நோய்த்தொற்றுக்கள் உண்டாகவும் வாய்ப்பு அதிகம். அதனால் குழந்தைகளின் ஆடைகளைப் பராமரிக்கும் போது, சில அடிப்படையான விஷயங்களை மனதில் கொள்வது அவசியம்.
குழந்தைகளுக்காக வாங்கும் ஆடையில் இணைக்கப்பட்டிருக்கும் லேபிள்களை முதலில் நன்றாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள வாஷிங் முறையைப் பயன்படுத்தினால் ஆடைகள் நீண்ட நாட்களுக்கு புதுசு போலவே இருக்கும்.
எந்த வகை ஆடையாக இருந்தாலும் அதிக வெப்பத்தால் பாழாகிப் போகும். அதனால் குளிர்ந்த நீரில் குழந்தைகளின் ஆடைகளைத் துவைத்திடுங்கள். அவற்றை உலர்த்தும் போது, நிச்சயம் அதிக வெயிலில் காய வைக்கக் கூடாது. மிதமான வெயிலில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்துதல் வேண்டும்.
துவைக்கும்போது கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், ஒவ்வொரு ஆடையையும் தனித்தனியாகத் துவைப்பது நல்லது. குழந்தைகளின் சில ஆடைகளில் வாட்டர் பிரிண்ட், ஆயில் பிரிண்ட் ஆகியவை போடப்பட்டிருக்கும். சில ஆடைகளில் சாயம் வெளியேறும்.
அவை மற்ற ஆடைகளில் சேர்ந்து, அவற்றையும் வீணாக்கிவிடும். ஆகையால் சிரமம் பார்க்காமல், தனித்தனியே ஆடைகளைத் துவைப்பது நல்லது. துணியைத் துவைக்கும் போது, வெளிப்புறம் அப்படியே துவைக்காமல், உள்புறமாகத் திருப்பித் துவைத்தல் வேண்டும்.
குழந்தைகளின் டயப்பர்களைத் துவைத்துக் காய வைக்கும்போது, நன்கு வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சூரிய வெப்பம் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மை கொண்டது.
குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவர்களின் ஆடைகளைத் துவைக்கப் பயன்படுத்துகிற டிடர்ஜெண்ட்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில், குழந்தைகளில் மேனியில் அலர்ஜி, ரேஷஸ் போன்றவை உண்டாகும்.