`அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக அவரது இயக்கத்திலேயே புதிய படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
சமீபத்தில் இதுகுறித்து சில தகவல்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். முதலில் “கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்று கூறியிருந்தார். இதனால் சிம்பு அடுத்ததாக தான் கைவிட்ட `கெட்டவன்’ படத்தை மீண்டும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதேபோல் `பில்லா’ படத்தின் மூன்றாவது பாகத்தை சிம்பு இயக்கி, நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த படம் குறித்த வெளியான சில வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவ்வப்போது சிம்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருந்ததாவது,
தான் இயக்கவிருக்கும் புதிய படம் ஆங்கிலத்தில் மட்டுமே உருவாகிறது என்றும், தமிழ் மற்றும் சில முக்கிய மொழிகளில் அந்த படம் டப் செய்யப்பட உள்ளதாகவும் சிம்பு கூறியிருக்கிறார். மேலும் படத்தின் திரைக்கதையை தீவிரமாக எழுதி வருவதாகவும், அவர் கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு வசனங்களை எழுதுவதின் மூலம் இயக்குநர் கவுதம் மேனன் உடன் சிம்பு மீண்டும் இணைந்திருக்கிறார்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. வருகிற செப்டம்பர் 2017-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.