கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில், இலங்கை வந்து சென்ற அகதியின் வழக்கை விசாரிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
2012ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவரின் கனேடிய அகதி அந்தஸ்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரிக்க முடியாதென கனேடிய உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
Vancouverஇல் நிரந்தர குடியுரிமை பெற்ற நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் என்பவரே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.
அவர் தனது குடியுரிமை விண்ணப்பத்தை கூட்டாட்சி அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என போராடி வருகின்றார்.
அவரது அகதி மற்றும் நிரந்தர குடியுரிமை நிலையை அகற்றலாமா என்பது தொடர்பான முடிவினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் இருந்து குடியுரிமை நீக்கப்பட்டால் அச்சம் இல்லாமல் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலையில் தங்கள் கட்சிக்காரர் உட்பட நூற்றுக்கணக்கான அகதிகள் கனடாவில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் Douglas Cannon தெரிவித்துள்ளார்.
வழக்கமான நடைமுறை போலவே, உச்ச நீதிமன்றம் இலங்கையரின் மேல்முறையீட்டு மனுவிற்கு எடுத்த தீர்மானத்திற்கான காரணங்களை கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையைச் சேர்ந்த நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் 2008ம் ஆண்டு கனடா சென்று, 2011ம் ஆண்டு அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார்.
இதேவேளை, அவர் 2011ம் ஆண்டிலும், 2012ம் ஆண்டிலும் இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார்.
இரண்டு தடவைகள் இலங்கை சென்று பாதுகாப்பாக நாடு திரும்பியமையால், அவருக்கு எந்தவித அச்சுறுத்தலும் அங்கு இல்லை என்ற நிலைப்பாட்டை கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு கனடாவின் முன்னாள் அரசாங்கம் ஏற்படுத்திய அகதிகள் சட்டத் திருத்தங்களின் அடிப்படையில், அவரது குடியுரிமையை பறிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவரது விண்ணப்பம் ஆரம்பத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது, ஆனால் அவர் புதிய இடைநிறுத்த விசாரணைக்கு காத்திருக்கின்றார்.
இதற்கிடையில், அவர் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தார், ஆனால் இறுதியில் அவரது குடியுரிமை விண்ணப்பம் இடைநிறுத்தப்பட்டு வழக்கின் முடிவு இடைநீக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு, தனது குடியுரிமை விண்ணப்பம் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி அவர் மத்திய நீதிமன்றத்திற்கு சென்றார்.
இந்த சூழ்நிலையில் கனேடிய குடியுரிமை அமைச்சருக்கு இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ள முடியும் என மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன் அவரது வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.