குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இலங்கையின் முதலாவது இரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கெரவலபிடியவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை வளமாக மாற்றி மாற்றுத் துறைக்கு பயன்படுத்தும் முறை இலங்கையில் இது வரை இடம்பெறவில்லை. கழிவு முகாமைத்துவத்திற்காக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமைகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி சுகாதாரமான முறையிலும், சூழல் நட்புடையதாகவும் கழிவகற்றல் முறைமையை ஏற்படுத்தி கழிவுகளிலிருந்து பெற முடியுமான பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான நிகழ்ச்சித் திட்டம் பெருநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வத்தளை, கெரவலபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு KCHT லங்கா ஜேன்ங் நிறுவனமும் வெஸ்டர்ன் பவர் நிறுவனமும் 27 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளன.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் ஒரு நிலையத்திலிருந்து 10 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்சார முறைமைக்கு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இதனுடன் இணைந்ததாக புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் ஒரு சுகாதார முறைமையிலான கழிவகற்றும் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 2 வருடங்களில் இந்த நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர்களான பாடலி சம்பிக்க ரணவக்க, ஜோன் அமரதுங்க, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்ரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.