பெண்ணியம் எனப்படுவது ஆண், பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாக அனைவராலும் பார்க்கப்படுகின்றது.
இந்த கோட்பாட்டை பறைசாற்றும் வகையில் பல சாதனைப் பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதனைப் படைத்துள்ளார்கள். நடப்பு உலகில் பலர் சாதித்துக்கொண்டும் இருக்கின்றார்கள்.
எனினும் இவ்வாறு முன்னேற்றப் பாதையை நோக்கி பெண்கள் சென்றுக்கொண்டிருக்கும் வேலையில் இடையில் ஒரு சில புல்லுருவிகளின் தாக்கம் இவற்றில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதாய் அமைந்து விடுகின்றது.
இதை பறைசாற்றும் வகையில் இலங்கையில் அரங்கேறிய சம்பவம்தான் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை.
குடும்ப பகை காரணமாக மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார் என ஆரம்பத்தில் கூறப்பட்டபோதிலும் வழக்கு தொடரத் தொடர பல மர்ம முடிச்சுக்களை வெளிக்கொணர்வதாய் வித்தியாவின் வழக்கு அமைந்துவிட்டது.
இந்நிலையில் மாணவி வித்தியா கொலை வழக்கின் வளர்ச்சிப் போக்கு சமூகப் போக்கு என ஒரே பார்வையில்..
கடந்த வார தொடர்ச்சி…
பல்வேறு காரணங்களுக்காக வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு 2015ஆம் ஆண்டு முழுதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் சந்தேக நபர்களுக்கு 2016 ஜனவரி 25ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
தொடர்ந்து 25ஆம் திகதியும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்தும் மரபனு சோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெறாததன் காரணத்தினால் மீண்டும் 2016 மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி வரை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
2016 மார்ச் மாதம் 18ஆம் திகதி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த கோரிக்கை அன்றைய தினம் மறுக்கப்பட்டதோடு வழக்கு விசாரணை எதிர்காலத்தில் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அங்கு பிணையைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைவாக சந்தேக நபர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
2016 மார்ச் மாதம் 28ஆம் திகதி சந்தேக நபர்கள் 11 பேரும் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம் எம் றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அன்றைய தினம் 5ஆம் மற்றும் 6ஆம் இலக்க சந்தேக நபர்களை சந்திப்பதற்கு அவர்களின் சட்டத்தரணிகள் அனுமதி கோரினார்.
இதன்போது சாதாரண நடைமுறையின் அடிப்படையில் சந்தேகநபர்களை சந்திப்பதற்கு அனுமதிக்க முடியாது எனவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றே அவர்களை சந்திக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். அத்தோடு சந்தேக நபர்களுக்கு 2016 ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் 2016 ஏப்ரல் 12ஆம் திகதி வரை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 2016 ஏப்ரல் 01ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது.
2016 ஏப்ரல் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தது வித்தியா கொலை வழக்கு. இதன்போது குறித்த 10 சந்தேக நபர்கள் ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து 2016 ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வரை அவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எஞ்சிய இரண்டு சந்தேக நபர்களும் அன்றைய தினமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு 2016 ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலும் நீடிக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் 13ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அன்றைய தினம் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வித்தியாவின் கொலை வழக்கு விசாரணை தொடர்பில் மரபனு சோதனைகளை மேற்கொண்டு வரும் ஜின் டெக் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளருக்கும், தகவல் ஊடக தொழில்நுட்ப மையத்தின் பிரதம பொறியியலாளருக்கும் ஊர்காவற்துறை நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
மரபணு ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதில் உள்ள தாமதம் குறித்து மே மாதம் 5 ஆம் திகதி தலைமை ஆய்வாளர் மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என இதன்போது ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியாழ் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
2016 ஏப்ரல் 25ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டதாக பொய்யான தகவலை வெளியிட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரியிடம் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியாழ் அன்றைய தினம் கேள்வியெழுப்பியிருந்தார்.
2016 மே 11ஆம் திகதி மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 9 பேரை தொடர்ந்து வரும் மூன்று மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
2016 மே மாதம் 13ஆம் திகதி மாணவி வித்தியாவின் படுகொலை அரங்கேறிய ஒரு வருட கறுப்பு நினைவு தினம். இதனைக் குறித்து பல்வேறு அமைப்பினராலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
2016 மே 18ஆம் திகதி வித்தியா கொலை வழக்கு தொடர்பான மரபனு சோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது இந்த வழக்குடன் தொடர்புடைய ஏனைய அறிக்கைகளையும் உடனடியாக நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் உத்தரவிட்டிருந்தார்.
2016ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் வித்தியாவின் தாய்க்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் காரணமாக வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
குறித்த உத்தரவை ஊர்காவற்துறை நீதவான் கருப்பையா ஜீவராணி பிறப்பித்திருந்தார். அதற்கமைவாக வித்தியாவின் கொலை வழக்கு 2016 ஜீன் 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அன்று தொடக்கம் இன்று வரை பல காரணங்களை மையப்படுத்தி புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு ஒத்திவைக்கப்பட்ட வண்ணமே காணப்படுகின்றது.
வழக்கு விசாரணைகள் தொடர்ந்து செல்லச் செல்ல புதிது புதிதான மர்மங்களும், இதனையொட்டிய பல காய்நகர்த்தல்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் காலமும் கடவுளும்தான் வித்தியாவின் கொலைக்கு தீர்வை பெற்றுத்தர முடியும் என்ற மனநிலை பொதுமக்கள் மத்தியில் திடம்கொண்டுள்ளது.
பொறுத்திருந்து பார்க்கலாம் வித்தியா படுகொலை வழக்கு இன்னும் எத்தனை எத்தனை மர்மங்களை வெளிக்கொணரப் போகின்றது என்று..!