புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடே காரணம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் விவாதிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதுவும் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதியை சந்தித்து புதிய அரசியலமைப்பு விடயம், வடக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை போன்ற விடயங்கள் தொடர்பில் கல்ந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவின் இறுதி அறிக்கை தயாராகியுள்ளது. ஆனால், இது தொடர்பில் சுதந்திர கட்சியினர் தமது கருத்தை முன்வைக்காத காரணத்தினால் அது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
இதனை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி, அரசியலமைப்பு உருவாக்கத்தினை விரைவுபடுத்துமாறு கோருவதற்கே அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றோம் என்றார்.