அரசமைப்புச் சபையில் தொடர்ந்து இருப்பதா அல்லது விலகுவதா என்பது தொடர்பில் முடிவெடுப்பதற்காக மஹிந்த தரப்பு கலந்தாலோசித்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மஹிந்த அணியிலுள்ள விமல் வீரவன்ஸவின் கட்சி அரசமைப்புச் சபையிலிருந்து விலகியதால் மஹிந்த அணியும் விலகுமா என்ற கேள்விகள் மக்களால் எழுப்பப்படுகின்றன.
இதுவரையில் நாம் அரசமைப்புச் சபையிலும் அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவிலும் அங்கம் வகிக்கின்றோம். அரசமைப்புச் சபையில் இருப்பதா, இல்லையா என்று முடிவெடுப்பதற்காக நாம் கலந்தாலோசித்து வருகின்றோம்.
நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்காகவும் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகவும் நாம் தொடர்ச்சியாக எமது பங்களிப்பை வழங்கி வருகின்றோம்.
புதிய அரசமைப்புக்கு நாட்டுக்கு விரோதமான யோசனைகள் முன்வைக்கப்பட்டபோதெல்லாம் வழிநடத்தல் குழுவில் இருந்து கொண்டு நாம் அவற்றை எதிர்த்திருக்கின்றோம்.
எமது நிலைப்பாடு என்றுமே நாட்டுக்கு ஆதரவானதாகும். ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்காமல் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே எமது முக்கிய பணியாகும்.
அரசமைப்புக் குழுவில் இருந்தோ அல்லது வழிநடத்தல் குழுவில் இருந்தோ விலக வேண்டிய தேவை எழுந்தால் அதுபற்றி சாதகமாக முடிவெடுப்போம். அதுபற்றி நாம் இப்போது கலந்தாலோசித்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.