டோக்லாம் அல்லது டோகா லாவில் பதற்றத்திற்கான உண்மையான காரணம் என்ன? பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பிற்கு முன் இந்த பதற்றங்கள் தொடங்கியதா? பீஜிங்கில் நடைபெற்ற ‘வலயமும் பாதையும்’ மாநாட்டில் (Belt and Road Forum) இந்தியா பங்கேற்காததற்கு காரணம் என்ன?
பலர் பலவிதமான கருத்துகளை தெரிவித்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த பதற்றத்தின் பின்னணிக் காரணத்தை இரு அரசுகளைத் தவிர வெகு சிலரே தெளிவாக அறிவார்கள்.
பதற்றத்திற்கு காரணம் சீனா என இந்திய மக்களும், இந்தியா என சீன மக்களும் கருதுகின்றனர். அதிவேக தொலைத் தொடர்பு சாதனங்களில் காட்டப்படுவதே உண்மை என்று பரவலாக கருதினாலும், உண்மை இருதரப்பு ராணுவத்தின் மூடிய திரைக்குள் உள்ளது.
சிக்கிம் மற்றும் பூடானுக்கு இடையில் ‘சும்பி பள்ளத்தாக்கு’ பகுதியில் சீனா அமைக்கும் சாலை, டோக்லாம் மைதானம் என்று அறியப்படும் பகுதி வரை செல்கிறது.
பிரச்சனை சீனாவுக்கும் பூடானுக்கும் இடையில்தான்
சீனா, பூடான் இரண்டுமே டோக்லாம் பகுதிக்கு உரிமை கோருகின்றன. திபெத் மற்றும் பூடானின் கால்நடை மேய்ப்பாளர்கள், கால்நடைகளை மேய்க்க இந்தப் பகுதியை பயன்படுத்துகின்றனர்.
சீனா இங்கு சாலையை உருவாக்கி, ஆயுதங்களை குவிக்கமுடியும் என்று இந்திய ராணுவம் கருதுகிறது. அது ராணுவ ரீதியாகவும், பிற வகைகளிலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கான பாதையும் இங்கிருந்தே செல்கிறது.
அகலம் குறைந்து நீண்டதாக தோன்றும் இந்தப் பதை, இந்தியாவில் ‘சிலிகுரி பாதை’ அல்லது ‘சிக்கன்ஸ் நெக்’ என்று அறியப்படுகிறது. இந்த பாதை சிக்கிம் மற்றும் பூடானை பிரிப்பதோடு, அசாம் மற்றும் இதர வடகிழக்கு பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கிறது.
நட்பு ஒப்பந்தம்
சரியாக சொல்ல வேண்டுமானால் சர்ச்சையென்னவோ பூடானுக்கும் சீனாவுக்கும் இடையில்தான். 1910 ஆம் ஆண்டு, ‘பிரிட்டன் இந்தியா’வால் பாதுகாக்கப்பட்ட நாடாக பூடான் மாறியது. ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட பிறகு பூடானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பிரிட்டன் இந்தியாவின் ஆட்சியின்கீழ் வந்தது.
1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது, தனிநாடாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் பூடானும் ஒன்று. அப்போதிருந்தே, இந்தியா மற்றும் பூடான் இடையே நெருங்கிய இணக்கமான உறவு தொடர்கிறது. 1950இல் சீனா திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, இந்தியாவுடனான பூடானின் உறவு மேலும் நெருக்கமானது.
பூடானின் எல்லை குறித்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. 1949இல் இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே ‘நட்பு ஒப்பந்தம்’ ஏற்பட்டபோது, பூடானின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியாவின் ‘வழிகாட்டல்’ பெறுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் இரு நாடுகளும் கலந்தாலோசித்து செயல்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த பூடானின் நிலைப்பாடு
இந்தியா-பூடான் இடையிலான நட்பு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டு 2007இல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, பூடானின் வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவின் வழிகாட்டுதல்கள், இறையாண்மை மூலம் மாற்றியமைக்கப்பட்டன.
பூடான் புவியியல் ரீதியாக மிகவும் முக்கியமான நிலப்பகுதியில் அமைந்துள்ளது. பூடானில் ஏற்படும் எந்தவிதமான பதற்றமும் அதன் எல்லைகளை மாற்றியமைக்கலாம், இந்தியா ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசியமும் ஏற்படலாம்.
இந்தியாவின் தலையீடு இல்லாமல் பூடானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பீஜிங் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறது. ஆனால், இந்த விசயத்தில் இந்தியா மற்றும் பூடானின் நிலை தெளிவாக இருப்பதாக, ஜூன் மாதம் 30ம் தேதியன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பூடான் அரசு
ஜூன் 16-ஆம் தேதியன்று டோக்லாம் வந்த சீனாவின் கட்டுமானக் குழுவினர் டோக்லாமில் சாலைகளை அமைக்க முயன்றனர்.
அதன்பிறகு, ஒருதலைபட்சமான இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு, சீன ராணுவத்திடம் ராயல் பூடான் ராணுவம் கூறியது.
டோக்லாம் பகுதியில் இருந்த இந்திய ராணுவ வீரர்களும் பூடான் தரப்பு கருத்துக்கு ஆதரவாக பேசி, தற்போதைய நிலையில் எந்தவித மாற்றமும் செய்யவேண்டாம் என்று கூறினார்கள்.
புதுடெல்லியில் உள்ள சீன தூதரகம் மூலமாக, பூடான் தூதர் சீன அரசுக்கு தங்கள் நாட்டின் ஆட்சேபணையைத் தெரிவித்தார். பூடான் தன்னுடைய நிலைப்பாட்டில் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக இருக்கிறது.
அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சகங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
ஒப்பந்தம் அத்துமீறல்
சீனாவின் அண்மை நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கவலை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளும், தற்போதைய நிலையில் மாறுதல்களையும் ஏற்படுத்துவதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக சீனாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா மற்றும் இதர நாடுகளிடையே எல்லை தொடர்பான விவகாரங்கள் ஆலோசனைகளுக்கு பிறகு தீர்மானிக்கப்படும் என்று 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நாடுகளின் எல்லை இருக்கும் பகுதியில் ஒருதலைபட்சமான நடவடிக்கை ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பது இந்தியாவின் வாதம்.
இரு நாடுகளுக்கு இடையிலான வேறு இதர தவறான புரிதல்களும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.
சீனா எதிர்ப்பு குழு
சீனா மற்றும் இந்தியாவுக்கான பதற்றத்தை அதிகரிப்பது போட்டி மட்டுமல்ல, 1962ம் ஆண்டு சீனாவுடனான போரில் எற்பட்ட அவமானகரமான தோல்வியில் இருந்து மீளமுடியாத இந்தியாவின் பரஸ்பர வெறுப்பும் ஒரு காரணம் என்று சீன நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது 1962 இல்லை, 2017 என்று குறிப்பிடும் இந்தியா, இந்தப் பதற்றத்தை ராணுவத்தால் எதிர்கொள்ளமுடியும் என்று கூறுவதற்கு வேறு காரணம் இல்லை என்று பொருள் கொள்ளப்படுகிறது.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் உட்பட சீனாவை தீவிரமாக எதிர்க்கும் குழுவிற்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதாக சீனா கருதுகிறது.
பதற்றமான உறவுகள்
சீனா-பாகிஸ்தானின் நெருக்கம் இந்தியாவிற்கு கவலை ஏற்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பம் பரிமாற்றத்தையும் தவறு என்கிறது இந்தியா.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணுபொருள் விநியோகக் குழு போன்ற சர்வதேச குழுக்களில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா வேண்டுமென்றே தடை ஏற்படுத்துவதாக இந்தியா கருதுகிறது.
பீஜிங்கில் மே மாதம் நடைபெற்ற ‘வலயமும் பாதையும்’ மாநாட்டில் (Belt and Road Forum) இந்தியா கலந்துக் கொள்ளாதது, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகளுக்கு உதாரணம் என்று சீன ஊடகங்கள் கூறுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான உறவுகள் அதிகரித்தாலும், ஒன்றை மற்றொன்று தவறாக புரிந்து கொள்ளும் போக்கும் தொடர்கிறது.