வடக்கு மாகாணசபையில் ஆளுங்கட்சியினரிடையே ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பலரும் நினைத்தபோதும், நாம் அந்தக் கருத்தை மறுதலித்து, வட. மாகாண சபையின் முறுகல் நிலைமையானது நீரு பூத்த நெறுப்பாகவே இருக்கின்றது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தோம்.
இப்போது மீண்டும் வடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் நியமனம் மற்றும் மாற்றங்கள் தொடர்பில் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. முதலமைச்சர் தலைமையில் கடந்த 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் கலந்துகொண்டதும், சுரேஸூக்கும், மாவை சேனாதிராசாவுக்கும் இடையே இடம்பெற்ற தர்க்கங்களையும், கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்த மாகாண அமைச்சர்கள் தொடர்பான விமர்சனங்கள், புதிய அமைச்சரவையில் யார் இடம்பெற முடியும் என்ற கருத்துக்களும் அதைத் தொடர்ந்து அங்கே கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடையே ஏற்பட்டிருந்த சலசலப்புக்களும் வெளிவராத சுவாரஷ்யங்களாகும்.
விவாதங்கள் முற்றிப்போன நிலையில் இன்னும் ஒரு வருடமே வடக்கு மாகாண சபைக்கு ஆட்சிக்காலமாக இருக்கின்ற நிலையில், அதற்கிடையே பிரச்சினைகளை பகிரங்கப்படுத்துவதால் தற்போது தமிழ் மக்களிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குறித்து எழுந்துள்ள வெறுப்பை அதிகரிக்க வழிவிட வேண்டாம் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு, முதலமைச்சரே நியாயமான தீர்மானத்தை எடுத்துக்கொள்ளட்டும் என்ற முடிவோடு சம்பந்தன், மாவை போன்றோர் கூட்டத்தை முடித்துக்கொண்டு எழுந்துவிட்டார்கள்.
கூட்டம் முடிவுக்கு வந்த விதம் முதலமைச்சருக்கும், கூட்டமைப்பின் பங்காளிகளுக்கும் திருப்தியாக அமையவில்லை என்றும், இதன் பின்னராக தமிழரசுக் கட்சி அடுத்தகட்ட தீர்மானம் ஒன்றை எடுக்கும் என்று தாம் உணர்ந்து கொண்டதாகவும் புரிந்து கொண்டதை அவர்கள் கூறினர். அதுபோலவே அடுத்த நாள் யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கூடிய தமிழரசுக் கட்சியினர் மத்தியில் மாவை சேனாதிராஜா, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதப் பொருளாக இருந்த விடயங்களை விபரித்தார்.
அவ்வாறு விபரிக்கும்போது, முதலமைச்சர் மாகாணசபையில் புதிய அமைச்சரவை ஒன்று அமைய வெண்டுமென விரும்புகின்றார். அந்த அமைச்சரவையில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரவையில் பங்கெடுப்பதற்கு முதலமைச்சர் விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதற்குக் காரணம், ஏற்கனவே தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்ததும், தனக்கெதிரான கருத்துக்களை முன்வைப்பதிலும் முன்னின்றவர்களை அமைச்சரவையில் உள்வாங்கினால் தன்னால் சங்கடமற்ற நிர்வாகம் ஒன்றை நடத்துவது சிரமமாக இருக்கும் என்று பல காரணங்களைக் கூறுகின்றார் என்று தெரிவித்த போது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
முதலமைச்சரின் செயற்பாடுகள் தொடர்பாக, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்களிடையே பலத்த அதிருப்தி நிலைமையே காணப்படுகின்றது. அதை கட்சியின் பொது நோக்கத்திற்காகவும், நலனுக்காகவும் ஒதுக்கி வைத்துவிட்டே தாம் ஆளுநரிடம் சமர்ப்பித்த முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றதும், அதன் பின்னர் தம்மீதான விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டே மீண்டும் மாகாணசபையில் முதலமைச்சருடன் இணைந்து செயற்பட முன்வந்தோம்.
நாங்கள் நடந்தவற்றை மறந்து முன்வந்தபோதும், முதலமைச்சர் பழைய நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு எங்களையும், தமிழரசுக் கட்சியையையும் பழி வேண்டத் துடிக்கின்றார். இவ்வாறான ஒருவருடன் இனிமேலும் மாகாண சபையில் இணங்கிப் போக முடியாது என்று காரசாரமாக மாவை சேனாதிராஜாவிடம் கூறியிருக்கின்றார்கள்.
இதைத் தொடர்ந்து இவ்விடயத்தை கூட்டமைப்பின் தலைமைக்கு எடுத்துக் கூறிய மாவை சேனாதிராசஜாவை, பொறுத்துப் போகுமாறு சம்பந்தன் சமரசம் செய்ய முயற்சித்திருக்கின்றார். அந்த சமாளிப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கட்சியின் உறுப்பினர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்திய பின்னர், இவ்வாறு கட்சியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தாம் நகர்வுகளை முன்னெடுக்க முடியாத நிலைமைதான் தொடருமாக இருந்தால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் முடிவையே எடுக்க வேண்டியிருக்கும் என்ற தனது நிலைப்பாட்டை மாவை சேனாதிராஜா எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்குத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடக் கூடாது என்பதற்கான தேவை சம்பந்தனுக்கு இருக்கின்றது. கூட்டமைப்பு உடைந்தால் தமிழரசுக் கட்சி தனியாகவும், ஏனைய இயக்கக் கட்சிகள் தனியாகவும் போய்விட்டால் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது ஒரு பிரச்சினையாக உருவெடுக்கலாம். சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பாக முன்னெடுக்கும் தொடர்பாடல்களில் சம்பந்தனின் வலிமை குறைந்துபோகலாம் என்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்காக தமிழரசுக் கட்சியை பகடைக் காயாக சம்பந்தன் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்து தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணக் கூட்டத்தில் பெரும் விவாதப் பொருளாக இருந்துள்ளது.
அதைத் தொடர்ந்து வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில், தமிழரசுக் கட்சி பங்கெடுப்பதில்லை என்ற பொதுத் தீர்மானம் எடுக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியலிங்கம் தமது பதவியை இராஜினாமா செய்தார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் டெனிஸ்வரன் தாமாக பதவி விலகப்போவதில்லை என்றும் தேவை இருந்தால் முதலமைச்சர் தன்னை பதவி விலக்கலாம் என்றும் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்.
டெனிஸ்வரன் ரெலோ இயக்கத்தின் சார்பில் மாகாணசபையில் உறுப்பினராகி அமைச்சராகியபோதும், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், விசாரணைகள், போன்ற விடயங்களில் தனக்கான நியாயத்தை முன்வைத்து செயற்படுவதால் அவரை ரெலோ இயக்கம் கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ள நிலையில் அவர் தற்போது ரெலோ உறுப்பினராகவோ, தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவோ இல்லாமல் சுயாதீனமாகச் செயற்படுகின்றார். ஆகையால் தனக்கான முடிவுகளை அவர் சுதந்திரமாக எடுக்கின்றவராக இருக்கின்றார்.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தெரிவான ரவிகரனை அமைச்சரவைக்குள் கொண்டுவர முதலமைச்சர் விரும்புகின்றபோதும், முல்லைத் தீவிலிருக்கும் பொது அமைப்புக்கள், ரவிகரன் நிதி மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து முதலமைச்சரின் விருப்பம் ஈடேறவில்லை.
தற்போதைய அமைச்சரவையில் டெனிஸ்வரன் வேண்டாத ஒருவராக முதலமைச்சருக்கும் இருக்கும் அதேவேளை முதலமைச்சரின் ஆதரவாளரான சர்வேஸ்வரன், அனந்தி ஆகியோரும் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். சுகாதாரத் துறைக்கான அமைச்சு வெற்றிடமாகவே உள்ளது.
அந்த வெற்றிடத்திற்கு ஒருவரை நியமிப்பதும், டெனிஸ்வரனை அகற்றி அதற்கும் புதிய ஒருவரை அமைச்சராக நியமிப்பதும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு முதன்மைக்குரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. புதிய அமைச்சரவையில் தமிழரசுக் கட்சியினர் பங்கெடுக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில் புதிய அமைச்சர்களாக, முதலமைச்சர் தனக்கு ஆதரவானவர்களையே நியமிக்க வேண்டியிருக்கும்.
அமைச்சரவையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாரும் பங்கெடுக்க மாட்டார்கள் என்று கூறுவது உண்மையாக இருந்தால் தமிழரசுக் கட்சி மாகாணசபை நிர்வாகத்தில் பங்கெடுக்காமல் ஒதுங்கப் போகின்றது என்பதுதான் உண்மையாக இருக்குமாக இருந்தால், மாகாண சபையின் தவிசாளர் பதவியிலிருந்தும் தமிழரசுக் கட்சி விலக வேண்டும். அதுபற்றிய விவாதங்கள் அந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட போதும், சபைத் தலைவர் பதவியை விட்டு விலக தான் தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டை சிவஞானம் முன்வைத்ததாகவும் தெரியவருகின்றது.
மாகாண சபையை தொடர்ந்து நடத்துவதற்கு முதலமைச்சருக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைப்பு வழங்காவிட்டால், எதிர்க்கட்சிகளின் பங்களிப்பைப் பெற்று மாகாணசபையை வீம்புக்கு நடத்திச் செல்ல முதலமைச்சர் விரும்பமாட்டார். அவ்வாறான சூழலில் மாகாணசபையை கலைத்துவிடுமாறு முதலமைச்சர் ஆளுநரைக் கேட்கும் நிலைமையே ஏற்படும் என்று புதிதாக அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் ஒருவர் கூறுகின்றார்.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், மாகாணசபை நிர்வாகத்தின் கடந்த நான்கு வருடங்களை வீணடித்துவிட்ட குற்ற உணர்ச்சியை மறைக்க, எஞ்சியுள்ள ஒரு வருடத்தையாவது சிறப்பாக நடத்த வேண்டும் என்ற ஆலோசனைகள் முதலமைச்சருக்கு பலராலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு முதலமைச்சருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.