அ.தி.மு.க. இணைப்பு முயற்சி தீவிரமாகி வரும் நிலையில் எடப்பாடி- ஒ.பி.எஸ் அணிகள் எந்த நேரத்திலும் ஒன்று சேரலாம் என்கிற பரபரப்பு அரசியல் களத்தில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அப்படி இரண்டு அணிகளும் இணைந்தால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்கும் நிலை உள்ளதாக இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. தீபா அணியினர் இதற்கு முட்டுக் கட்டை போடும் நிலையில் செயல்பட்டு வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவே அ.தி.மு.க.வின் உண்மை யான வாரிசு என்றும், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தீபா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 லட்சம் பிரமாண பத்திரங்கள் தீபா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க கொடியையும் பயன்படுத்துவதற்கு தீபா அணியை அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டது.
தீபா சார்பில் அந்த அணியில் தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன், உயர்மட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலபதி ஆகியோர் இந்த மனுவை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
2013 ம் ஆண்டு நடைபெற்ற பொதுச் செயலாளர் தேர்தலில்அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொண்டர்களின் ஒத்துழைப்போடு ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற அல்லது உயர்நீதி மன்ற முன்னிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற வேண்டும்.
அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் ஆவணம் செய்ய வேண்டும். அ.தி.மு.க.வின் விருப்பப்படியும் ஒத்துழைப்போடும் உண்மையாக தாக்கல் செய்துள்ள 5.52 இலட்சம் பிரமாணபத்திரங்களை ஏற்றுகொண்டு கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். போயஸ் தோட்ட இல்லத்தை அடியாட்கள் துணையோடு டி.டி.வி. தனது கட்டுபாட்டில் வைத்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தை அதிகாரத்தை பயன்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஓ.பி.எஸ். மத்திய அரசாங்கத்தோடு நெருக்கமாக இருப்பதால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஏதே ஓரு வகையில் அழுத்தத்தை கொடுத்து கட்சியின் சின்னத்தையும் கொடியையும் பெற்று விடலாம் என்று கருதுகிறார்.
இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்பது யாருடைய கட்டுப்பாட்டிற்க்கு உட்படாத மகாத்தான அதிகாரத்தையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது. யாருக்கும் அடி பணிய வேண்டிய அவசிய மில்லை. உதாரணமாக குஜராத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமதுபடேல் அவர்களே வெற்றி பெற்றுள்ளளார்.
அதிகாரமும், பணமும் உள்ளவர்கள் வெற்றி பெறமுடிய வில்லை. எனவே அ.தி.மு.க.வின் 1.65கோடி லட்சம் ஆதரவு பெற்றுள்ள 5.52லட்சம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ள அ.இ.அ.தி.மு.க. ஜெ.தீபா அணிக்கே கட்சியின், கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும், பயன்படுத்த ஆவணம் செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் சாதகமான முடிவு கிடைக்க விட்டால் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் தீபா அணியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆயத்த பணிகளிலும் அவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.