முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா திருவாரூரில் வருகிற 19ம் திகதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார்.
பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ள திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கும், மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் ஆகியோருக்கும் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா அணியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், டிடிவி தினகரன் அணிக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கருணாநிதி உள்ளிட்ட திமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.