‘அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான்’ என்பது பழமொழி. ஆண்டவனின் திருவடியைப் பற்றினால் அனைத்திலும் வெற்றி காணலாம் என்பதைக் குறிக்கும் விதத்திலேயே அந்தப் பழமொழி அமைந்திருக்கின்றது. அப்படிப்பட்ட ஆண்டவனே, ‘அடி’ வாங்கித் திருவிளையாடல் நடத்திய மாதம் தான் ஆவணி.
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம் படிபட்ட திருநாள், ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவார்கள். அதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
இறைவனே வேலை பார்த்துச் சம்பளம் வாங்கிய நாள் என்பதால், உத்தியோகத்தில் பிரச்சினை இருப்பவர்கள், அன்றைய தினம் உள்ளன்போடு சிவபெருமானை வழிபட்டால் பிரச்சினை விலகும். எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆவணி மூல வழிபாட்டில் கலந்து கொண்டால், மூல நட்சத்திர தோஷங்கள் விலகி ஓடும். முன்னேற்றங்கள் வந்து சேரும். மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் அவசியம் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது.
சகல ஆலயங்களிலும் நடைபெறும் புட்டுத் திருவிழாவில் கலந்து கொண்டால், உத்தியோக முயற்சியில் வெற்றி, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.