நீதிக்குப் புறம்பான விதத்தில் தமிழ் மக்கள் மீது அழுத்தங்களைக் கொடுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்ணஜீவ கூல் தெரிவித்துள்ளார்.
தெற்கில் பொதுமக்களை கௌரவமாக நடத்துகின்ற பொலிஸார் வடக்கில் வேறுவிதமாக செயற்படுவதாக அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் அவர் மேலும்,
16ஆம் திகதி எனது வீட்டுக்கு வந்த பொலிஸார் என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற பிடி ஆணையைக் காட்டினார்கள். அது 6 வருடங்களுக்கு முந்தியது.
அவர்களுக்கு நான் யார் என்பது தெரியும். பொலிஸார் எனது வீட்டுக்கு வந்து என்னைக் குற்றவாளி போன்று நடத்திய சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இதன் மூலம் தேர்தல்கள் திணைக்களத்தின் மதிப்பு பொதுமக்கள் மத்தியில் சீரழிக்கப்பட்டது என்று நினைக்கின்றேன். இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர் ஒரு குற்றவாளி தேர்தல் நடத்துவதற்குப் பொறுப்பானவராக எப்படியிருக்க முடியும் என்று பொதுமக்கள் எண்ணக்கூடும்.
இந்தச் சம்பவம் தேர்தல் ஆணைக்குழு சுதந்திரமானதா என்ற கேள்வியும், எனது மனைவி மற்றும் பிள்ளைகள் பாதுகாப்பாக இலங்கையில் இருக்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
போலியான குற்றவியல் குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்தி 2011ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பிலேயே என்னைக் கைது செய்ய வந்திருந்தனர்.
6 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்வதற்காக பொலிஸார் கொண்டு வந்த நீதிமன்ற அனுமதிக் கடிதத்தில் எனது பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் சட்டரீதியான துல்லியத்தன்மை பேணப்பட்டிருக்கவில்லை. அது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு. அதனால் நான் நாட்டைவிட்டு வெளியேறுவதே பொருத்தமானது என்று சட்டத்தரணிகள் ஆலோசனை கூறினர்.
அதனடிப்படையில் நாட்டிலிருந்து வெளியேறினேன். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு திரும்பினேன். 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிவான் லெனின்குமார், இந்த வழக்கு எந்தச் சட்ட அடிப்படைகளையும் கொண்டதல்ல என்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனாலும் என்னை நன்கு அறிந்தவர் என்பதால் தன்னால் இந்த வழக்கைக் கைவிட முடியாது என்றும் லெனின்குமார் தெரிவித்திருந்தார்.
சட்டமாஅதிபர் திணைக்களம் அந்தக் கோவைக்கு எந்தப் பதில் குறிப்பும் வழங்காமல் அப்படியே திருப்பி அனுப்பியது. அதன் பின்னர் அந்த வழக்கு அப்படியே போய்விட்டது.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் எல்லாம் மாறிவிட்டது என்கின்ற பிம்பத்தை உடைக்கும் முதல் சமிஞ்சையாக இது எனக்குப்படுகின்றது.
16ஆம் திகதி வீட்டுக்கு இரண்டு பொலிஸார் வந்தனர். நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட மஞ்சள் துண்டு எங்கே என்று கேட்டனர். அதைத் தராவிட்டால் உங்களைச் சிறைக்குத் தள்ளுவோம் என்று பொலிஸாரில் ஒருவர் கோபமாக கத்திக் கொண்டேயிருந்தார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருக்கே இந்த நிலமை என்றால், சாதாரண பொதுமகனின் நிலை எப்படி இருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
6 வருடத்துக்கு முன்னர் நீதிமன்றால் வழங்கப்பட்ட பிடியாணை இப்போது செல்லுபடியாகுமா இல்லையா என்பதைப் பொலிஸார் அறிந்து வைத்திருக்க மாட்டார்களா? ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு பொலிஸார் கொடுத்த குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் இந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டதா? அல்லது அதற்கு மேலாலும் வேறு சில விடயங்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ஊடாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இனி இவ்வாறான சம்பவம் நடைபெறாது என்று உறுதியளித்தார்.
நீதிக்குப் புறம்பான விதத்தில் தமிழ் மக்கள் மீது இப்படியான அழுத்தங்களைக் கொடுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பொலிஸாருக்கு அடிப்படைச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் படிப்பிக்க வேண்டும். தமிழ் பேசும் பொலிஸாரை வடக்கு – கிழக்கில் நியமிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் தான் இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க முடியும்.
மக்கள் முன்னிலையில் இவ்வாறான சம்பவம் நடத்தப்பட்டதன் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவினரான எங்களுக்கு ஏதோவொரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றதா என்று தேர்தல்கள் ஆணைக்குழு கருதுகின்றது. எனவே பொலிஸ் திணைக்களம் இதற்குப் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.