எமது முன்னோர்களின் வாழக்கை முறை, அவர்களது காலத்தில் பேணப்பட்டு வந்த கலை, கலாச்சாரங்கள் மற்றும் அவர்களது அறிவாற்றல், கண்டுபிடிப்புக்கள் என்பனவற்றை தற்போது நாங்கள் வரலாறாக காண்கின்றோம்.
அது போலவே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில், நாம் வாழும் சூழலில் ஏற்படுகின்ற அறிவியல், சமய, கலாச்சார மாற்றங்களையும் எமது வாழ்க்கைமுறையையும் எதிர்கால சந்ததி வரலாறாக காணும்.
இந்நிலையில் நாம் வாழ்கின்ற காலப்பகுதியில் சிறந்த சிந்தனைகளையும், சிறந்த படைப்புக்களையும், தலைசிறந்த மனிதர்களையும் உருவாக்க வேண்டியது எமது தார்மீக பொறுப்பாகும்.
பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலங்களை இந்த வரலாறு குறித்து நிற்கின்றது. எனவே நாம் இந்த சமூகத்தில் விதைப்பவை அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுபவையாக இருக்க வேண்டும்.
எனினும் தற்காலத்தில் சில கருப்புச் சம்பவங்கள் கூட எமது எதிர்கால வரலாற்றிலும் செல்வாக்கு செலுத்துவதாய் அமைந்துவிடுகின்றது. அவ்வாறு நடந்தேறிய ஒரு துயரம்தான் யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை..
மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வழக்குகளில் பல்வேறு திசைத்திருப்பல்களும், அரசியல் தலையீடுகளும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும் கூட மாணவியின் வழக்கை 2 வருடத்திற்கும் மேற்பட்ட காலங்களாக இழுத்தடிப்புச் செய்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வித்தியா கொலை செய்யப்பட்ட தினத்திலிருந்த இன்று வரை இடம்பெறுகின்ற வழக்கின் போக்கு சமூகப்போக்கு என்பன ஒரே பார்வையில்,
கடந்த வாரத் தொடர்ச்சி….
2016ஆம் ஆண்டில் இடைப்பகுதி வரை வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வந்த வண்ணமே காணப்படுகின்றது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வித்தியாவின் வழக்கு.
அன்றைய தினம் சந்தேக நபர்கள் 12 பேரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
எனினும் அன்றைய தினமும் வழக்கு விசாரணைகள் தொடர மீண்டும் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி வரை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் அன்றைய தினம் 12 சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி சந்தேக நபர்கள் 12 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
அன்றைய தினமும் கூட ஊர்காவற்துறை நீதவான் எம்.எம்.றியாழ் மீண்டும் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வரை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியலை நீடித்தார்.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மீண்டும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அன்றைய தினம் வழக்கு ஊர்காவற்துறை நீதவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபர்கள் 12 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அத்துடன் அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய சந்தேகநபர்கள் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி ரஞ்சித் குமார் அன்றைய தினம் முன்னிலையாகி இருந்ததோடு, பிரதிவாதிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை.
2016 ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினமும் வழமைபோல சந்தேகநபர்களுக்கு விளக்கமறில் நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி வரை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
அத்துடன் மாணவியின் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதிப் பகுதியில் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஊர்காவற்துறை நீதவான் தெரிவித்திருந்தார்.
ஒக்டோபர் மாதம் 2016 18ஆம் திகதி வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அன்றைய தினமும் வழக்கினை நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு நீதவான் ஒத்தி வைத்ததுடன், சந்தேக நபர்களின் விளக்கமறியலையும் நீடிக்க உத்தரவிட்டார்.
மீண்டும் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கி தரவுகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சந்தேகநபர்கள் தொடர்பில் 14 வங்கிகளிடமிருந்து தரவுகளை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அன்றைய தினம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவர்களின் கோரிக்கைக்கு அமைய ஊர்காவற்துறை நீதவான் றியால் அன்றைய தினம் அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதேவேளை மாணவியின் கொலையுடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களின் விளக்கமறியலும் மீண்டும் நீடிக்கப்பட்டது.
இவ்வாறு மீண்டும் மீண்டும் மாணவியின் படுகொலை வழக்கு பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டும், சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டும் வந்தது.
தொடர்ந்து 2016ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற்றது. சந்தேகநபர்கள் 12 பேரையும் யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பதில் நீதவான் சரோஜினி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை அன்றைய தினம் பிறப்பித்திருந்தார்.
தொடர்ந்து மீண்டும் ஒரு விளக்கமறியல் நீடிப்பு..
ஜனவரி மாதம் 2017 ஆண்டு 5ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
அதற்கமைய, சந்தேகநபர்கள் 12 பேரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் அன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பதில் நீதவான் ஆர். சபேசன் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவைப் பிறப்பித்தார்.
மீண்டும் 2017 ஜனவரி மாதம் 19ஆம் திகதி வழக்கு விசாரணை தொடர்கின்றது. அன்றைய தினம் சந்தேகநபர்கள் 12 பேரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேசன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தை கடந்த நிலையிலும் அதுவரை வித்தியா கொலைக்கு உரிய தீர்வு கிடைக்கபெறவில்லை என்பது அன்றைய தினத்தில் அனைவரிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
பெப்ரவரி 2ஆம் திகதி வழக்கு விசாரணையின்போது, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 பேரில் 10ஆம் சந்தேகநபரை தவிர்த்து மற்றைய 11 பேரும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது குறித்த 11 பேரையும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் றியால் உத்தரவிட்டிருந்தார்.
இதில் 10ஆவது சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் மனு யாழ்.மேல் நீதிமன்றத்தில் அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டதால் 10ஆவது சந்தேகநபரான கரகே பேடிக்கே பியவர்த்தன ராஜ்குமார் யாழ்.மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
அன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றத்தில், 10ஆவது சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும்படி அரச சட்டத்தரணி நிசாந்த் முன்வைத்த மனு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த 10ஆவது சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி ஜோய் மகாதேவன், மாணவி வித்தியா படுகொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 12 பேரில் 10ஆம் எதிரிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபரின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10ஆவது சந்தேக நபர் கலகே பேடிக்கே பியவர்த்தன ராஜ்குமார் என்ற நபருக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடைந்திருந்தது.
ஆனால் குறித்த சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்படி அரச சட்டத்தரணி நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து குறித்த 10ஆவது சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை மேலும் இரு மாத காலத்திற்கு நீடித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறு முடிவிலியாய் இன்றளவில் தொடர்கின்றது.. விடை தெரியா புதிராய் எம்மவரிடையே பல குழப்பங்களையும், பல மர்மங்களுக்கான சந்தேகங்களையும் தோற்றுவித்திருக்கும் வித்தியா கொலை வழக்கு.