கனடா நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைவதை புலம்பெயர்ந்தவர்கள் தவிர்க்க வேண்டும் என அந்நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை அரவணைப்பதில் கனடா முன்னணியில் திகழ்ந்து வருகிறது.
சட்டவிரோதமான வழக்கு, உள்நாட்டு யுத்தம் மற்றும் தீவிரவாதம் ஆகிய காரணங்களால் தாய்நாடுகளை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தவர்களுக்கு மதம், இனம், மொழி பாகுப்பாடு இல்லாமல் கனடா புகலிடம் வழங்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கனடா நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐயர்லாந்து பிரதமரான Leo Varadkar-வுடன் நேற்று மாண்ட்ரீயல் நகரில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் பேட்டியளித்தபோது, ‘அனைவருக்காகவும் கனடா நாட்டின் கதவுகள் திறந்துள்ளன.
ஆனால் ஒரு விடயத்தை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். கனடா நாட்டில் புகலிடம் அளிப்பது தொடர்பாக சட்டங்கள் உள்ளன.
இந்த சட்டங்களை மீறி முறையற்ற வகையில் கனடாவிற்குள் நுழைய வேண்டாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடா அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிபரத்தில், அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த யூலை மாதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
இம்மாதம் வரை சட்டவிரோதமாக நுழைந்த 3,100 புலம்பெயர்ந்தவர்களை கனேடிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
எனவே, கனேடிய சட்டங்களை மீறி நுழையும் புலம்பெயர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.