ஊடகங்கள் தமது வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்களை பரபரப்படையச் செய்வதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தெற்கில் இடம்பெறுவதற்கு இணையான குற்றச் செயல்களே இடம்பெறுகின்றன. எனினும், யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய திரைப்படங்களின் காரணமாக இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் அடிமட்டமான குழுக்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்பட்டன. ஆனால், தற்போதைய நிலைமை மாறிவிட்டது.
இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது என்றும் கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக யுத்த நிலைமைகளில் வாழ்ந்த யாழ்ப்பாண மக்கள், மீண்டும் அந்த நிலைமையை எதிர்பார்ப்பதாக தாம் கருதவில்லை என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஏனைய பாகங்களில் இடம்பெறும் சம்பவங்ளைப் போலவே யாழ்ப்பாணத்திலும் இடம்பெறுகின்றன.
ஆனால், ஊடகங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அவற்றைப் பரபரப்பாக்குகின்றன.
தெற்கின் நிலைமைகளை விட யாழ்ப்பாணத்தின் நிலைமை அமைதியாக உள்ளது எனவும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.