புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் பெறப்பட வேண்டிய சகல வாக்குமூலங்கள் மற்றும் விசாரணைகளை எதிர்வரும் மாதம் நான்காம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த உத்தரவு நீதவானால் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச சட்டமா அதிபர் திணைக்களத்தினருக்கு பிறப்பிக்கப்பட்டது.
வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் நான்காம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடமும் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.