இன்னும் சில நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும் தான் என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் செயற்பாடே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நடந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு அரசியல் சக்திகளுக்கு அடிபணிந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் தலைவரும், செயலாளருமே ஏற்கவேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அதன் தலைமைத்துவம் மீது நம்பிக்கையில்லை. பாரிய அளவிலான உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
கூடிய விரைவில் கட்சியின் தலைவரும், செயலாளரும் மாத்திரமே எஞ்சியிருப்பார்கள் என்று எமக்கு கண்கூடாகத் தெரிகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே மக்கள் உள்ளனர் என்பதை எவராலும் நிராகரிக்க முடியாது.
மக்களின் வாக்குகளில் தெரிவாகிய நாம் மக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். தேர்தலில் தோல்வியடைந்து தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் போன்று எங்களால் தலையாட்ட முடியாது.
மக்களின் விருப்பத்துக்கேற்ப மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நாங்கள் தலைவராக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவத்தில் அமர்த்தும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.