யாழ். புங்குடுதீவை சேர்ந்த மாணவியான சிவலோகநாதன் வித்தியா வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால், நேற்று (22) இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மாணவியின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான, சுவிஸ்குமார் என, அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை தப்பிக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேக நபர் தப்பிச்சென்றமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட 6 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, சந்தேக நபரான சுவிஸ் குமாரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்திருந்தபோது, அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலும் மன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, நீதிமன்ற உத்தரவுக்கமைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தை குற்றப் புலனாய்வு பிரிவினர் மன்றில் சமர்ப்பித்தனர்.
சுவிஸ் குமாரை பொதுமக்கள் பிடித்து கட்டிவைத்திருந்தபோது, சந்தேக நபரை கைது செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், காவல்துறையினரிடம் தெரிவித்ததாக, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மன்றில் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அடுத்த நாள் இடம்பெற்ற வேலணை பிரதேச சபை கூட்டத்தின் போதே, விஜயகலா அறிந்துகொண்டுள்ளதாக அவர்கள் மன்றில் கூறினர்.
இதேவேளை, சுவிஸ் குமார் தப்பிச் சென்றமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ள முடியும் என, சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியது.
முன்னதாக, சுவிஸ் குமார் யாழ். நீதவான நீதிமன்ற பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டுள்ளமையினால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறு, நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், சந்தேக நபரை விடுவித்த சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மாணவி வித்தியா, கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.