எதற்காக இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தார்களோ அந்த நோக்கத்தை இந்த அரசாங்கம் நிறைவேற்றுகின்றதா என்கிற கேள்வி இப்பொழுது பொதுமக்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் ஏற்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி, இன்றைய ஆட்சியாளர்களைக் கொண்டுவந்த மக்கள் அதன் பலாபலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களா? என்று யாரேனும் கெள்வி எழுப்புவார்களாயின் அதற்கான பதிலை அண்மைய செய்திகள் சொல்லும்.
தெற்கு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயமாக பிணைமுறி விகாரமும், ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் காணப்படுகிறது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ரவி கருணாநாயக்கவின் செயற்பாடானது ஒரு குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது. அதாவது ரவி கருணாநாயக்க தன் மீது கொண்டு வரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
மிகவும் உருக்கமான பேச்சுடன் நாடாளுமன்றில் தனது உரையை முன்வைத்த ரவி கருணாநாயக்க, தன்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருந்தார்.
அத்துடன் நாட்டில் மீண்டும் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், அரசாங்கத்தை பாதுகாப்பதற்குமே தான் பதவி விலகியதாகவும், நான் குற்றமற்றவன் என்பது விரைவில் வெளிவரும் எனவும் அவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே ரவி கருணாயக்க கடந்த வருடம் நவம்பர் மாதம் சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் தொடர்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டிருந்தது.
பிரேரணை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் அளிக்கப்பட்டதோடு 28 பேர் சமூகமளிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இருப்பினும் தற்பொழுது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ரவி கருணாநாயக்க பதவி விலகியிருப்பது அரசியல் நாடகம் என்ற ரீதியிலான கருத்துக்களை அரசியலின் முக்கிய புள்ளிகள் பதிவு செய்திருந்தனர். நல்லாட்சிக்கு எதிரானவர்கள் இது தொடர்பில் தமது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.
இது இவ்வாறு இருக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி முயற்சி செய்து வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவித்திருந்தன.
பிணைமுறி விவகாரம் நடைபெற்ற போது மத்திய வங்கியானது பிரதமரின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நியமிக்கப்பட்டு, ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்த காலத்தில் தான் இந்த பிணைமுறி விவகாரத்தில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இதனை முதன்மைப்படுத்தி, பிரதமர் மீது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் உறுப்பினர்களின் உதவியினையும் நாடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு அரசியல் களத்தில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் உட்பூசல்கள் நிகழ்ந்த வண்ணமிருக்க, தற்போது நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் சந்தேகத்தையும், குழப்பத்தையும் தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் ஏற்கனவே நம்பிக்கையில்லாப் பிரேரணை எனும் சூறாவளிக்குள் சிக்கி பதவி துறந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவிக்கையில், இது போன்ற சந்தர்ப்பத்தில் அதை பற்றி குறிப்பிட தமக்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்திருந்தார்.
இருப்பினும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தனது முழு ஆதரவினை வழங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது என வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், ஐக்கிய தேசியக் கட்சியில் திருடர்கள் இருப்பது விசாரணைகளில் உறுதியானால் அவர்களை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் திருடர்களை பாதுகாக்காது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி திருடர்களின் கட்சி அல்ல எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வெளியிடப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பிலான நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தொடர்ச்சியாக நம்பிக்கையில்லா பிரேரணை எனும் ஆயுதத்தை கொண்டு நல்லாட்சிக்கு பயத்தை ஏற்படுத்தும் நிலைமை உள்ளதா அல்லது உண்மையிலேயே இவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வரப்படுவது அவசியமா என்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறு இருப்பினும் நல்லாட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனவே தன்மீது ஏற்படும் கறையை தானே துடைத்து நல்லாட்சி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என்பதே இந்த நாட்டின் பிரஜைகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.