வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மீள உருவாக்குவது மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே செல்கிறது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அமைச்சர்களை நியமிப்பதில் காட்டும் தேர்வு முறைமை கட்சிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்துவதால் தெளிவான ஓர் அமைச்சரவை அமைவது இன்னமும் முடிவாக வில்லை.
முதன் முதலில் தான் அமைத்த அமைச்சரவையைக் கலைத்துவிட்டுப் புதிதாக ஒன்றை அமைக்க முதலமைச்சர் விரும்பினார். முதல் அமைச்சரவையில் அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்த இரு அமைச்சர்கள், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களில் சிக்கிக்கொண்டு பதவி விலகவேண்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்தார்.
ஆனால், மற்றைய இரு அமைச்சர்களையும் பதவி நீக்குவது அவருக்கு இலகுவாக இருக்கவில்லை. எனினும் அமைச்சர் நியமனத்தின்போது தமிழ் அரசுக் கட்சியைப் பழிவாங்குகினார் என்பதால் அந்தக் கட்சி அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்று முடிவெடுத்தது. அதனால் சுகாதார அமைச்சராக இருந்தவரான ப.சத்தியலிங்கம் பதவி விலகினார். இதனால் மூன்றாவது அமைச்சர் பதவி வெற்றிடமானது.
நான்காவது அமைச்சரான மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தானாகப் பதவி விலக அடியோடு மறுத்துவிட்டார். முடிந்தால் பதவி விலக்குங்கள் என்றார். இதை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்வதாக முதலமைச்சர் வடக்கு மாகாண ஆளுநருக்கு அறிவித்தார்.
அவரது அமைச்சுப் பொறுப்புகளில் ஒன்றை அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு கொடுப்பதுடன் ஏனையவற்றை தான் பொறுப்பேற்கிறார் என்றும் அறிவித்தார்.
அப்படி தனது அமைச்சர் ஒருவரை பதவி நீக்கிவிட்டு வேறு ஒருவரை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையை ஆளுநர் கோரியிருப்பதால் அமைச்சர் டெனீஸ்வரனின் பதவி நீக்கம் இன்னும் செல்லுபடியாகாமலேயே அந்தரத்தில் தொங்குகிறது.
இதற்கிடையில் ரெலோ அமைப்பு சார்பில் டெனீஸ்வரனுக்குப் பதிலாக மாகாண சபை உறுப்பினர் க.விந்தனை அமைச்சுப் பதவியில் அமர்த்துமாறு பரிந்துரைக்கப்பட்டபோதும் அதனை நிராகரித்த முதலமைச்சர் மருத்துவர் குணசீலனை சுகாதார அமைச்சராக நியமிக்க ஆளுநருக்குப் பரிந்துரைத்திருக்கிறார்.
முதலமைச்சரது அந்த நியமனத்தை ஏற்க ரெலோ உடனடியாகவே மறுத்துவிட்டது. அதன் செயலாளர் சிறிகாந்தா முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தங்கள் தெரிவு விந்தனே, எந்தக் காரணமாக இருந்தாலும் வேறு யாரையும் தமது கட்சி சார்பில் ஏற்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் இப்போது கட்சியின் முடிவை மீறி குணசீலன் பதவியை ஏற்பாரா என்கிற இழுபறி தோன்றியிருக்கிறது.
விந்தனை நிராகரித்து எழுதிய கடிதத்தில் நான்காவது அமைச்சராக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பவன் எனப்படும் க.சிவநேசனை நியமிக்க இருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பத்திரிகையாளர் சிவராம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுவதால் இதே சிவநேசனுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாது என்று முன்னர் அவருக்கே கடிதம் எழுதியவர் முதலமைச்சர்.
ஆனால் இப்போது அந்தக் கொலைக்குற்றச்சாட்டில் இருந்து பவன் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தாமல், புளொட் அமைப்பின் தெரிவு அவரே என்பதாலும் அவருக்குப் பதவியை வழங்க முன்வந்துள்ளார் முதலமைச்சர்.
இதற்கிடையில் டெனீஸ்வரனின் பதவி நீக்கம் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரை நேற்று மாலை வரை ஆளுநர் அலுவலகத்திற்குக் கிடைக்கவில்லை.
அனேகமாக இன்று அது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று பரிந்துரைக்கப்பட்டால் பவனின் நியமனம் கேள்விக்குறியாகிவிடும். இப்படி மேலும் மேலும் இடியப்பச் சிக்கலுக்குள் சென்றுகொண்டிருக்கிறது வடக்கு மாகாண அமைச்சர்கள் நியமனம்.