யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவரொருவர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் 9 மாணவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப் பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக விஞ்ஞான பீடத்தை எதிர்வரும் மாதம் செப்டம்பர் மாதம் 04ம் திகதி வரை மூட யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பிரிவின் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் வவுனியா – மதவயின்குளம் பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய விஜயரட்ணம் வின்துஷன் என்ற மாணவரே இவ்வாறு மரணமாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கொன்டாவில் தங்குமிட விடுதியில் மூன்று நாட்களாக டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் கடந்த 20 ம் திகதி யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் விஞ்ஞானப்பீடத்தை சேர்ந்த 09 மாணவர்கள் டெங்கு தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக , மாணவர்களின் கோரிக்கைக்கு அமைவாக யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
இன்று மதியம் 12 மணியின் பின்னர் விஞ்ஞானப்பிரிவிற்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , விஞ்ஞானப்பிரிவின் கல்விச் செயற்பாடுகள் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04ம் திகதி ஆரம்பமாகும் எனவும் அதற்கிடையில் , டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.