சிறுநீரகத்தின் செயல்பாடு ரத்த அழுத்தத்தையே பெரிதும் சார்ந்துள்ளது. எனவே சிறுநீரகக் கோளாறு ஏற்படும் போது உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையும், நீண்ட காலமாக ரத்த அழுத்தம் இருந்தால், சிறுநீரகக் கோளாறுகளும் உண்டாகும்.
நமது உடல் வளர்சிதை மாற்றத்தினால் ரத்தத்தில் கழிவுப்பொருட்கள் சேர்த்து கொண்டே இருக்கும். அந்த கழிவுகளை சிறுநீரகம் ரத்தத்தில் இருந்து பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.
இதற்கான சிறுநீர் பிரித்திகள் சிறுநீரகத்தினுள் அமைந்திருக்கும், இதன் மூலம் தான் ரத்தம் வடிகட்டப்படுகிறது.
அதுவே உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு, சிறுநீரகத்திற்கு வரும் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும். அதனால் சிறுநீர் பிரித்திகளின் செயல்திறனும் அதன் எண்ணிக்கையும் குறைகிறது.
இதன் காரணமாக சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து, தீங்கு விளைவிக்ககூடிய கழிவுப்பொருட்களை உடலிலேயே தேக்கி வைத்து விடும்.
இதனால் சிறுநீரகம் கழிவுப் பொருட்களையும், யூரிக் அமிலத்தையும் வெளியேற்ற இயலாமல், அவைகள் ரத்தத்துடன் கலந்து யூரோமியா எனும் அபாய நிலையை ஏற்படுத்தி, இதயத்திற்கான பளுவை அதிகரிக்கச் செய்கிறது.