ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்தியதால், கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 417 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது நிறுவனம் சார்ந்த பொருட்கள் மூலம் ஏற்படும் புற்றுநோய் அபாயங்கள் குறித்து போதுமான எச்சரிக்கையினை ஜான்சன் & ஜான்சன் தரவில்லை என பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், கலிஃபோர்னியா நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பில்தான் அதிகபட்ச இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது.
முந்தைய வழக்குகளில் மேல் முறையீடு செய்தது போலவே இந்த வழக்கிலும் மேல் முறையீடு செய்ய ஜான்சன் & ஜான்சன் திட்டமிட்டுள்ளது.
அறிவியலை எங்கள் நிறுவனம் பின்பற்றுவதால், தற்போதைய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளோம், என ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் செய்தி தொடர்பாளர் கரோல் குட்ரிச் கூறியுள்ளார்.
ஜான்சன் & ஜான்சன் பொருட்களை பயன்படுத்திய பிறகு தங்களுக்குப் புற்றுநோய் வந்ததாக ஆயிரக்கணக்கான பெண்களின் குற்றச்சாட்டை இந்நிறுவனம் எதிர்கொள்கிறது.
புற்றுநோய் குறித்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் எதிர்கொண்ட நான்கு வழக்குகளில், மூன்றில் தோல்வியடைந்தது. இதனால் 300 மில்லியன் டாலர்களை இந்நிறுவனம் அபராதமாக செலுத்தியுள்ளது.
கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கை 63 வயதான எவா எச்செவேர்ரியா கொண்டு வந்தார். தனது 11-ஆம் வயது முதல் அவர், ஜான்சன் & ஜான்சன் குழந்தை பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
முகப்பவுடரால் புற்றுநோய் ஆபத்து இருப்பதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிந்திருந்த போதிலும், அத்தகவலை மக்களிடம் இருந்து மறைந்துள்ளனர் என நீதிமன்றம் கூறியிருக்கின்றது.