பாலைவனத் தீவில் 20 வருடங்களாக, யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்துவரும் முதியவர் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் ரெஸ்டோரேஷன் ஐலன்ட் எனப்படும் தீவில் இவர் வசித்து வருகிறார்.
டேவிட் கிலெஷீன் என்ற 73 வயதுடைய இந்த முதியவர், ஆரம்ப காலங்களில் பணக்காரராக இருந்த போதிலும் பங்குச் சந்தை சரிவின் காரணமாக சொத்துக்களை இழந்தவர் எனக் கூறப்படுகிறது.
1997 ஆம் ஆண்டு இந்தத் தீவுக்கு ஒரு நாய்க்குட்டி ஒன்றுடன் வந்து குடியேறியிருக்கிறார் டேவிட். அதன் பின்னர் தனக்குத் தேவையான உணவுகளை தானே தயாரித்து, உண்டு வாழ்ந்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
“இங்கே விஷமான பாம்பு வகைகளும் ஆபத்தான பூச்சியினங்களும் இராட்சத முதலைகளும் வாழ்கின்றன. எனினும் உலகின் வேறு இடங்களில் உள்ளதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் போன்று இவை ஆபத்தை விளைவிக்கக் கூடியவை அல்ல.
நாம் இயற்கையோடு ஒன்றித்து வாழ வேண்டும். இங்கே எனக்கு பாதுகாப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். ஆதலால் இந்த இயற்கையை நான் பெரிதும் நேசிக்கிறேன். எனக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் நித்திரைக்குச் செல்கிறேன்” என்றார்.
இவர் பாலைவனப் பகுதியில் தனித்து வாழ்வதால் அதிகாரிகளால் அங்கிருந்து சென்றுவிடுமாறும் பணிக்கப்பட்டிருக்கிறார்.
எனினும் தனது மரணம் இங்கேயே நிகழ வேண்டும் என்றும் இந்த உலகத்தின் சுவர்க்கமே இந்தத் தீவுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.