நாய் ஒன்று முச்சக்கரவண்டி சாரதியையும் வண்டியில் பயணம் செய்த இருவரையும் வெறியுடன் கடித்து படுகாயபடுத்திய சம்பவம் கம்பஹா ஹேனேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தனது ஜோடியை முச்சக்கர வண்டி மோதியதால் கடும் ஆத்திரமுற்ற நாயொன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹேனேகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் தனது மகள் மற்றும் பேரனுடன் தேவை ஒன்றுக்காக தனது முச்சக்கர வண்டியில் வெலிவேரியவை நோக்கிச் சென்றுள்ளார்.
இச் சந்தர்ப்பத்தில் வீதியின் நடுவில் நின்ற நாய் ஜோடி ஒன்று வீதியின் இரு புறமும் பாய்வதற்கு முயற்சித்துள்ளது.
எதிர்பாராத இச் சம்பவத்தில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரத்தில் நின்ற பெண் நாயை மோதித் தள்ளிக் கொண்டு குடை சாய்ந்துள்ளது.
இதனால் அந்தப் பெண் நாய் அவலக் குரல் எழுப்பியுள்ளது. இதைக்கேட்டு ஓடி வந்த ஆண் நாய் முச்சக்கர வண்டியை நோக்கி குரைத்துக் கொண்டே பாய்ந்து அதிலுள்ளவர்களை வெறியுடன் கடித்துக் குதறியுள்ளது.
அவர்களது கூக்குரலைக் கேட்ட அயலவர்கள் விரைந்து வந்து நாயை விரட்டி முச்சக்கர வண்டியில் வந்தவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.