நாட்டுக்கு பாதகமான செயல்களை இந்த ஆட்சியாளர்கள் முன்னெடுக்கும் போது, அதனை தட்டிக்கேட்டமைக்காகவே நீதி அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார் என்பதை எத்தனை பேர் அறிவர்? என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“விஜயதாச ராஜபக்ஸவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஐ.தே.கட்சியினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடயத்தில் நீதியை நிலைநாட்ட முடியாமல் போனமைக்கு இவர் தான் காரணம் என்ற போலியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாம் தான் பிரச்சினை என்றால் இரண்டு வருடங்கள் ஏன் பொறுத்திருந்தார்கள்? கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது கூட விஜயதாசவை நீக்கியிருக்க முடியும்.
அது தவிர ஒருவருக்கு நீதி வழங்கும் விடயத்தில் அமைச்சரின் தலையீடு இருக்க முடியாது. அப்படி தலையீடு இருந்தால் அது நீதியாகவே இருக்க முடியாது. இக் கருத்தை சிந்தித்தாலே எல்லாம் பொய்யானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இன்று இலங்கை நாடு சர்வதேச அழுத்தங்களுக்கு அடி பணிந்தும் சுயநலன்களை அடிப்படையாக கொண்டும் சர்வதேச ஆட்சியாளர்களின் கால்களில் மண்டியிட்டுக் கிடக்கின்றன.
சர்வதேசமானது இலங்கையில் தமிழர்களின் விடயங்களில் நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டை எதிர்பார்க்கின்றது.
இதற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இடம் கொடுக்கவில்லை. இது போன்று இன்னும் சில விடயங்கள் உள்ளன. அதனை நேரம் வரும் போது உண்மையை வெளியிடலாம் என்று கருதுகின்றோம்.
இது போன்று தான் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க துறைமுக அமைச்சில் இருந்து கொண்டு சர்வதேசங்களில் இலங்கையை அடமானம் வைப்பதை தனது அமைச்சின் மூலம் தடுத்து நிறுத்தினார்.
நல்லாட்சி அவரை குறித்த அமைச்சிலிருந்து நீக்கி தனது விடயங்களை சாதித்துக் கொண்டது. இவற்றையெல்லாம் வைத்து சிந்தித்தால் இவற்றின் உண்மை தன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
எங்களது இலங்கை நாட்டை இவ்வாட்சியாளர்களிடமிருந்து காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.