நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.
அந்தவகையில், உடல் எடையை குறைக்க கூடியதும், வீக்கம், வலியை போக்கவல்லதும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டதும், பசியை அடக்க கூடியதும், ரத்தத்தை கட்டுப்படுத்த கூடியதுமான நாயுருவியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது நாயுருவி. இது ரத்தபோக்கை வற்றச்செய்யும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்குவதோடு, சிறுநீர் தாரையில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது. கை கால்களில் ஏற்படும் வீக்கத்தை கரைக்கும். இதை புகைத்து நுகர்வதால் மூளைக்கு பலம் ஏற்படுகிறது.
நாயுருவி இலைகளை பயன்படுத்தி சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம், கட்டிகளை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாயுருவி இலை, தேன்.நாயுருவி இலை சாறு 5 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து தினமும் ஒருவேளை குடித்துவர சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம், கட்டிகள் கரையும். உடலில் ஏற்படும் அசதி, உடல் வலி குறையும். நெறிக்கட்டும் இடங்களில் ஏற்படும் வீக்கம், வலி, காய்ச்சலை போக்குகிறது. தைராய்டு சுரப்பி பிரச்னையால் ஏற்படும் வீக்கத்தை கரைக்கிறது.
நாயுருவி இலையை பயன்படுத்தி ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நாயுருவி இலை, நல்லெண்ணெய்
செய்முறை: நாயுருவி இலை சாறை நல்லெண்ணெய்யில் கலந்து குடிக்கும்போது ரத்தப்போக்கு கட்டுப்படும். ஆசனவாய் பகுதியில் ஏற்படும் ரத்த கசிவு, ரத்த மூலம், அதிக மாதவிலக்கு ஆகியவற்றுக்கு உள்மருந்தாகி ரத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
நாயுருவி விதைகளை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: நாயுருவி விதை, தேன்.
செய்முறை: நாயுருவி விதை 5 முதல் 10 கிராம் எடுக்கவும். இதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர உடல் எடை குறையும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். உடலுக்கு பலம் தருகிறது. ஞாபகசக்தியை அதிகரிக்கும்.
நாயுருவி பசியை அடக்க கூடிய மூலிகையாக விளங்குகிறது. பசி அடங்கும்போது உணவு உட்கொள்ளும் அளவு குறைந்து, உடல் எடை குறைய காரணமாகிறது.
பல்வேறு நன்மைகளை கொண்ட நாயுருவி உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பை போக்குகிறது.
வண்டுக்கடி, பூச்சுக்கடிக்கு மேல்பற்றாக போடும்போது விஷ முறிப்பானாக பயன்படுகிறது.அலர்ஜியினால் தோலில் உண்டாகும் அரிப்பு, சிவப்பு தன்மையை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: சீரகம், வெண்ணெய்.
இப்பிரச்னைக்கு உணவுக்காக பயன்படுத்தும் சீரகம் அற்புத மருந்தாக விளங்குகிறது. சீரகத்தை நன்கு பொடித்து எடுக்கவும். இதனுடன் சிறிது வெண்ணைய் சேர்த்து கலந்து மேல்பற்றாக பூசும்போது தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு தன்மை இல்லாமல் போகும்.