நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையில் பௌத்த ஆலயத்துக்கான அடையாளங்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால் அவை தமிழ் பௌத்த அடையாளங்களே அன்றி சிங்கள பௌத்த அடையாளங்கள் அல்ல – என தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்தவாரம் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் அங்கு 8 இடங் கள்அடையாளமிடப்பட்டுள்ளன. இதில் வெடியரசன் கோட்டை முக்கியமானதாக அடையாளங்களும் காணப்பட்டுள்ளது என அதிகாரி சுட்டிக்காட்டிய போது, அவை தமிழ் பௌத்த அடையாளமா சிங்கள பௌத்த அடையாளமா என இணைத் தலைவரால் கேட்கப்பட்டது. அப்போது தமிழ் பௌத்த அடையாளங்களாகவே காணப்படுவதாக கூறப்படுகிறது என அதிகாரி பதிலளித்தார்.
இதன்போது குறுக்கிட்ட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்,
‘‘அனைத்து தொல்பொருள் அடையாளங்களின் அருகிலும் 3 மொழிகளிலுமான அறிவித்தல் பலகைகள் நடுமாறு தீர்மானிக்கப்பட்டது. அவை இன்றுவரையும் நடப்படவில்லை. அவை உடன் நிறைவேற்ற வேண்டும்’’–என்றார்.