மட்டக்களப்பு மங்களராம விகாரையின் தலைமை பிக்குவான சர்ச்சைக்குறிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இன்று மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கொடும்பாவியை எரித்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளர்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வாழும் சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவருவதால் தான் பெரும் உயிர் அச்சுறுத்துலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் மட்டக்களப்ப பொலிசாரும் தன் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தன்னை கைதுசெய்ய சதி செய்து வருவதாக குற்றம்சாட்டிய நிலையிலேயே அம்பிட்டியே சுமணரட்ண தேரர் பொலிசாருக்கு எதிராக உருவப் பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றார்.
மட்டக்களப்பு மங்களாராம விகாரை வளாகத்தில் இன்றைய தினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் உருவ பொம்மையொன்றை வடிவமைத்திருந்த அம்பிட்டிய சுமணரட்ண தேரர் அதற்கு தீ வைத்து பொலிசார் மீதான தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எவ்வித விசாரணையும் நடத்தாது தனக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தமையைக் கண்டித்தே இன்றைய தினம் புதன்கிழமை பொலிசாரின் உருவப் பொம்மையை தீயிட்டு கொளுத்தியதாக சுமனரத்ன தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கெவிலியாமடு விகாரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவந்த பொலிஸ் உத்தியோகத்தர் சுமனரத்ன தேரரின் அடாவடித் தனத்தை எதிர்த்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து மங்களாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த சுமனரத்ன தேரர் மது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையில் கடமையில் ஈடுபட்டதாலேயே அவருடன் வாக்குவாத் ஏற்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்டிருந்த பொலிசார் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையில் இருந்ததை உறுதியானதை அடுத்து அவர் குறித்து மேலிடத்திற்கு அறிவித்து தற்காலிக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் சுமனரத்ன தேரர் தன்னை தாக்கியதாக தெரிவித்து அவருக்கு எதிராக மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளதுடன் பொலிசார் திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து வருவதாகவும் சாடியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அப்பாவி மக்களுக்காக குரல் கொடுத்து வருவதினால் தான் உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் தனது நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸாரே தனக்கு எதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமை மிகவும் மோசமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே இன்றைய தினம் பொலிஸ் உருவபொம்மையை தீ வைத்துக் கொளுத்தி எதிர்ப்பை வெளியிட்டதாகவும் மங்களராம விகாரையின் தலைமை பிக்குவான சர்ச்சைக்குறிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.