மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்தை ஆய்வு செய்து அளவிடும் பணியை வருவாய் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தற்போது இந்த விவகாரத்தில் அவர் புதிய குற்றச்சாட்டை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
எனது அத்தை (ஜெயலலிதா) வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கி விட வேண்டும் என்பது பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் ஒருவரின் விருப்பமாகும். அவரது விருப்பத்தை நிறைவேற்றவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போயஸ்கார்டன் வீட்டை, நினைவு இல்லம் ஆக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அப்படியே இந்த திட்டத்தை அவர் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கும் பயன்படுத்தி விட்டார். பா.ஜ.க.வின் தூண்டுதலால் எல்லாம் நடந்து வருகிறது.
பொதுவாக ஒரு இடத்தை அரசு கையகப்படுத்துவதாக இருந்தால் அது பாலம் கட்டுவதற்காகவோ அல்லது வேறு பொது பயன் பாட்டை கருத்தில் கொண்டே இருக்கும். ஆனால் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு கையகப்படுத்துவதில், என்ன பொது நலன் உள்ளது?
அப்படியே பொதுநலன் இருந்து அந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டால், அதற்கான இழப்பீட்டை அ.தி.மு.க. கட்சி நிதியில் இருந்து தானே தர வேண்டும். மக்களின் வரிப்பணத்தை எடுத்து தருவது எப்படி சரியாகும்?
ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகள் பற்றிய இதர விபரங்கள் பற்றி தெரியவில்லை. ஜெயலலிதா சொத்துக்களில் மூக்கை நுழைக்க கூடாது என்று சசிகலா குடும்பத்தினர் என்னிடம் கூறினார்கள்.
குறிப்பாக போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைய கூடாது என்று உத்தர விட்டிருந்தனர்.
இவ்வாறு தீபக் கூறினார்.