ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்காட்லாந்து வீராங்கணையை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கணைகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதி போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிரிஸ்டி கில்மோர் உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டில் சிறப்பாக விளையாடி 21-19 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றிய சாய்னா, இரண்டாவது செட்டில் 18-21 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இதனால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில் அதிரடி ஷாட்களை சாய்னா அடிக்க தொடங்கினார். பரபரப்புடன் நடைபெற்ற இந்த செட்டில் 21-15 என்ற கணக்கில் சாய்னா வென்றார். இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார்.
இந்த வெற்றியால் குறைந்த பட்சம் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு சாய்னாவுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கணை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.