கணவனை இழந்த விதவைப் பெண்ணொருவருக்கு வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட அறுபதாயிரம் ரூபா பெறுமதியான இரு மறி ஆடுகள் வீட்டிற்கு முன்பாகக்கட்டப்பட்டிருந்த நிலையில் திருடிச் செல்லப்பட்டுள்ளன.
இத் திருட்டுச் சம்பவம் யாழ். ஏழாலை வடக்கு கலாநிதி வீதியில் நேற்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்மணியின் கணவர் கடந்த-2013 ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் நோய்வாய்ப்பட்ட நிலையில் இறந்துள்ளார்.
இந்த நிலையில் பெண் பிள்ளையொருவர் ஏற்கனவே வன்னியிலுள்ள ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்தநிலையில் மேற்படி பெண்மணி தற்போது நோயாளியான 28 வயது மகனை வீட்டில் வைத்துப் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நோயாளியான மேற்படி பெண்மணி வருமானம் எதுவுமின்றி வாழ்ந்து வந்தநிலையில் விதவைப் பெண்மணியின் கோரிக்கைக்கமைய கடந்த வருடம் இரு மறி ஆடுகள் கிராம சேவகர் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.
இரு ஆட்டையும் குறித்த பெண்மணி நன்கு பராமரித்து வளர்த்து வந்துள்ள நிலையில் இரு ஆடுகள் மூலமாகவும் பயன்கள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை நித்திரை விட்டெழுந்த குறித்த பெண்மணி வீட்டின்முன் வழமையாக ஆடுகள் கட்டப்பட்டிருக்கு மிடத்திற்குச் சென்று பார்த்த போது இருமறி ஆடுகளும் திருட்டுப் போனமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த பெண்மணியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
தனக்கு வாழ்வாதாரமாக வழங்கப்பட்டிருந்த இரு மறி ஆடுகளும் திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் குறித்த பெண்மணி கண்ணீர் மல்க கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஏழாலையில் அண்மைக் காலமாக கால்நடைகளின் திருட்டு அதிகரித்துக் காணப்படுவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த சுன்னாகம் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.