நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இடையில் காணப்படுகின்ற திறைமரைவிலான பகைகளை தீர்த்துக் கொள்வதற்காக நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டுவர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் எதிர்வரும் சில வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிமுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுதந்திரக் கட்சியினர் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்தனர்.
எனினும் பிரேரணை கொண்டுவர முன்னரே ரவி கருணாநாயக்க பதவி இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக காணப்படுகின்ற 7 விதமான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர ஒன்றிணைந்த எதிர்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேவேளை, ராஜபக்சவினரை காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினரே பிரேரணை கொண்டுவர முயற்சித்தபோதிலும் அவரும் அதற்குமுன்னர் இராஜினாமா செய்தார்.
அதுமட்டுமன்றி, சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வெளியரங்கமாக ஒன்றிணைந்திருந்தாலும், திரைமறைவில் ஒன்றுக்கொண்டு எதிராக செயல்பட்டுவரும் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் குறித்து ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிக்கின்றமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, அரசாங்கத்திலுள்ள டொப் 10 என்று அடையாளம் காணப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு எதிராக எதிர்வரும் வாரங்களில் நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகை ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கத்தைக் குழப்ப முயற்சிக்கும் உள்ளக மற்றும் வெளியக சக்திகள் தொடர்பாக எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது நிறைவாண்டு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய தீர்மானங்களை அறிவிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.