விநாயகர் தனது தும்பிக்கையை வலது, இடது என்ற இரு பக்கமாக வளைத்தவாறு அருள் புரிகின்றார். இதனால், வலபக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘வலம்புரி விநாயகர்’ என்றும், இடப்பக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘இடம்புரி விநாயகர்’ என்றும் அழைக்கின்றனர். இரு விநாயகரும் கேட்கும் வரம் தந்து வினைகளை தீர்ப்பவர் என்றாலும் இவ்விரு விநாயகர்களுக்கும் உள்ள சிறப்புகளை அறிவதும் அவசியமாகிறது.
‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை குறிக்கும் வலம்புரி விநாயகர்
வலம்புரி விநாயகர் ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களில் மட்டுமே வழிபட முடியும். வலம்புரி விநாயகருக்கு என்று ஓர் சிறப்பம்சம் உண்டு. இதில், தும்பிக்கையின் வளைவு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அமைப்பை ஒத்துள்ளது. வாய் பகுதியின் வலது ஓரம் ஆரம்பித்து கன்னம், மத்தாம் தொந்தி வழியாக சுழன்று தும்பிக்கை வளைந்து இருக்கும்.
இதுவே வலம்புரி விநாயகர் சிறப்பு. வலம்புரி விநாயகரின் சிறப்பிற்கு மேலும் ஓர் காரணமாய், இரு முறை விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவபெருமான் எடுத்து சென்று விட்டார். பின் அவர் வந்து கேட்க என்னிடம் இல்லை. என் மகன் விநாயகன் வைத்திருக்கிறான் என்றார். பின் பல முறை அலைந்து திரிந்து விநாயகரிடம் தனது வலம்புரி சங்கை திரும்ப பெற்றார் விஷ்ணு.
இப்படி பல நாள் வலம்புரி சங்கை தனது தும்பிக்கையில் வலது பக்கம் வைத்திருந்ததாலும் விநாயகரை வலம்புரி விநாயகர் என்று அழைக்கின்றனர். விஷ்ணுவின் சங்கை வைத்திருந்த காரணத்தால் வலம்புரி விநாயகரை வணங்கிட சகல காரியங்களும் சித்தியாகும் என்பதாம். வளமை, வல்லமை, செல்வம் வழங்கும் விநாயகராக வலம்புரி விநாயகர் திகழ்கிறார்.
வலம்புரி விநாயகர் கோவில்களில் சில மிகவும் பழமையான வரலாற்று சிறப்பு மிக்கவையாக உள்ளன.
தமிழகத்தின் பழமையான பிள்ளையார் கோவிலான பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் தான். செவல்பட்டியிலும், செட்டிநாட்டு பகுதிகள் பலவற்றிலும் வலஞ்சுழி விநாயகர் ஆலயம் உள்ளன.
பிரான்மலை என்ற ஊரில் உள்ள சிறப்பு மிக்க குடைவரை கோட்டை கோயிலில், வலம்புரி விநாயகர் சங்க நிதி, பதும நிதி ஆகியோருடன் இணைந்து உள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருவலஞ்சுழியிலும் வலம்புரி விநாயகர்களை வழிபடலாம். வலம்புரி விநாயகரை வழிபட வேண்டிய வரங்களை பெறலாம்.
வினைகளை தீர்க்கும் இடம்புரி விநாயகர்
விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக சுழித்தபடி இருப்பின் இடம்புரி விநாயகர் எனப்படுவார். பொதுவாக சிற்ப சாஸ்திரத்தில் வினை தீர்க்க கூடியவர் என கூறப்படுகிறது. மேலும், இடர்களை தீர்ப்பவர் இடம்புரி விநாயகர் என பேச்சு வழக்கில் கூறுவர். அனைத்து ஆலயங்களிலும் இடம்புரி விநாயகரே அருள் புரிவார்.
மணக்குள விநாயகர் போன்ற சிறப்பு மிகு பல கோயில்களில் விநாயகர் இடம்புரி விநாயகராகவே காட்சி தருகிறார். இன்னல்களை தீர்க்கும் வகையில் எங்கும் நிறைந்துள்ளார். இது தவிர்த்து இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் இணைந்து அருள்புரியும் கோயில்களும் உள்ளன. பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கல்யாண விநாயகர்கள் என்றவாறு இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் அருள் புரிகின்றனர்.
திருவலாங்காடு கோயிலில் வலம்புரி, இடம்புரி விநாயகர்கள் காட்சி தருகின்றனர். எந்த வடிவ விநாயகராயினும் நம்கை காத்து அருள் புரிவதில் எவ்வித பாகுபாடும் இன்றி அருள்மழை பொழிவர்.