பாகிஸ்தானில் அனூஷி என்ற இந்துப்பெண், மரியா என்ற பெயருடன் இஸ்லாமிய மதத்துக்கு மாறி பிலாவல் அலி பூட்டோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர், தங்கள் மகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறுகின்றனர்.
இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக் முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சித்திக்கிடம் அந்தப் பெண், தான் விருப்பப்பட்டுத்தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாக கூறியதுடன், அதை நிரூபிக்கிற வகையில், அந்த மத அரபி பிரார்த்தனைகளை கூறினார். யாரும் தன்னை வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்யவில்லை என்றும் கூறினார்.
மரியாவும், பிலாவல் அலி பூட்டோவும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, கோர்ட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
நீதிபதி சித்திக், அந்தப் பெண்ணை அவரது பெற்றோரை சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து நீதிபதியின் செயலர் அறையில் அவர்கள் 40 நிமிடம் சந்தித்து பேசினர்.
அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் தாயார், நீதிபதியிடம் “எங்கள் மகளை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவோம். கொஞ்ச காலத்திலேயே எங்கள் மகளை பிலாவல் கைவிட்டு விடுவார்” என்று கூறினார்.
ஆனால் நீதிபதி, அதை நிராகரித்தார்.
இறுதியில் மரியாவும், அவரது கணவரும் இஸ்லாமாபாத்தில் இணைந்து வாழ நீதிபதி அனுமதி அளித்தார். அவர்களுக்கு உள்ளூர் போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.