பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது. பீகாரின் 19 மாவட்டங்களில் 1.71 கோடி பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 262 நிவாரண முகாம்களில் 1.65 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் 16 மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகாரில் வெள்ளம் பாதிப்பு அடைந்த மாவட்டங்களை பிரதமர் மோடி, முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, பீகார் மாநிலத்துக்கு நிவாரண தொகையாக ரூ.500 கோடி வழங்கி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.