அத்ரி மகரிஷி, தமது பத்தினி அனுசுயா தேவியுடன் தென் குமரியின் ஞானாரண்யம் எனும் பகுதியில் தவச்சாலை அமைத்து தங்கியிருந்தார். உலகிற்கு தம் கற்பின் பெருமையை எடுத்துக்காட்ட நினைத்த அனுசுயாதேவி, சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக உருவாக்கி உணவிட்டு மகிழ்ந்தாள்.
அப்போது அத்ரி மகரிஷியும், அனுசுயா தேவியும் மும்மூர்த்திகளையும் அங்கேயே எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டினர். மும்மூர்த்திகளும் அங்கிருந்த கொன்றை மரத்தினடியில் ஒரே உருவமாக திருக்காட்சி தந்து எழுந்தருளினர். திருமாலை முடியிலும், பிரம்மாவை அடியிலும் வைத்து, தன்னை நடுவில் இணைத்துக் கொண்டு சிவலிங்க வடிவமாக ஈசன் அருள்புரியும் இடமே தென் குமரியின் ஞானாரண்யம் எனப்படும்‘சுசீந்திரம்’ ஆகும்.
இத்தல தாணுமாலய சுவாமியின் லிங்க வடிவில் சாத்தப்பட்டுள்ள தங்கக் கவசத்தில், சுவாமியின் திருமுகம், அதன் மேற்புறம் 14 சந்திரப் பிறைகளும், அதன் மேல் ஆதிசேஷனும் காட்சியளிக்கின்றன. இந்த ஆலயத்தில் வெளிச் சுற்றுப் பிரகார நிறைவில், மேற்குப் பகுதியில் ‘இந்திர விநாயகர்’ தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இந்தக் கோவிலில், கடைசியாக வழிபடப்படும் தெய்வம் இந்த இந்திர விநாயகர் தான். விநாயகப்பெருமானை முதலில் அல்லவா வழிபட வேண்டும்?. இங்கு எப்படி கடைசியில் இந்திர விநாயகரை வழிபடு கிறார்கள்? அதற்கு சிறு புராணக் கதை கூறப்படுகிறது. அதைப் பார்ப்போம்.
கவுதம முனிவரின் மனைவியான அகலிகையின் மேல் மோகம் கொண்ட இந்திரன், அவளை ஏமாற்றி அடைந்துவிடுகிறான். இதை அறிந்த கவுதமர், இந்திரனின் உடம்பெல்லாம் பெண் குறிகளாகும் படி சபிக்கிறார். இதனால் குறுகிப்போன இந்திரன் சாப விமோசனம் வேண்டி கற்புக்கரசி அனுசுயா திருவடி பதிந்த தென்குமரி திருத்தலம் வந்து, தாணுமாலய சுவாமியை வழிபட்டான். அவனது நீண்ட கால வேண்டுதலின் பலனாக, அவனது உடலில் இருந்த குறிகள் அனைத்தும் நீங்கி, சுத்தமானான்.
இந்திரன் இத்தலத்தில் பூஜித்து சுத்தமானதால் இத்தலம் ‘சுசி+இந்திரம்= சுசீந்திரம்கிசி என அழைக்கப்படுகிறது. சுசி என்றால் சுத்தமானது என்றும், இந்திரம் என்பது இந்திரனையும் குறிக்கும். தாணுமாலய சுவாமியின் கருவறையில் அர்த்தஜாம பூஜைகளை, அர்ச்சகர்கள் யாரும் செய்வதில்லை. ஆனால் அர்த்த ஜாம பூஜைக்கான அனைத்து பொருட்களையும் கருவறையில் வைத்து விடுவார்கள். அப்படி இரவு நேர பூஜைக்காக பொருட்களை வைத்த அர்ச்சகர், மறுநாள் பெருமாள் கோவிலுக்குச் சென்று விடுவார். முன்தினம் பெருமாள் ஆலயத்தில் இரவு பூஜை செய்தவர், மறுநாள் காலையில் தாணுமாலையன் கருவறைக்கு பூஜை செய்ய வருவார்.
காரணம்… இங்கு ஒவ்வொரு நாளும் அர்த்த ஜாம பூஜையில் தாணுமாலையனை, இந்திரன் பூஜிப்பதாக ஐதீகம். முன்தினம் இரவு வைத்த பொருட்கள், மறுநாள் காலையில் மாறுதல் அடைந்திருக்குமாம். எனவேதான் இந்த அர்ச்சகர் மாற்றம். ‘அகம் கண்டதை புறம் சொல்லேன்’ என சத்தியம் செய்தே ஒவ்வொரு அர்ச்சகரும் இங்கு பூஜிக்கிறார்கள். இப்படி அனுதினமும் அர்த்தஜாமத்தில் தாணுமாலயனை வழிபட வரும் இந்திரன், இத்தல வெளிப் பிரகாரச் சுற்றின் மேற்குப்புறம் உள்ள இந்திர விநாயகர் சன்னிதி வந்து, முதலில் இந்திர விநாயகரை வழிபட்டுப் பின்பு தாணுமாலய சுவாமி கருவறைக்குச் சென்று வழிபட்டு வருவதாக ஐதீகம்.
இந்திரன் அனுதினமும் இரவில் முதலில் வழிபடும் இந்திர விநாய கரை பக்தர்கள் ஆலய வழிபாட்டின் நிறைவில் வழிபட்டு சகல செல்வங்களையும் அடைகிறார்கள். சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில் இத்தல உதய மார்த்தாண்ட விநாயகர், திரு நீலகண்ட விநாயகர், விநாயகி, தாணுமாலய சுவாமியை வழிபட்டு நிறைவில் வழிபடப்படும் இந்திர விநாயகர் ஆகியோரை முறைப்படி வழிபட்டால் வாழ்வில் வளங்களும், நலன்களும் நிரம்பும் என்று கூறப்படுகிறது.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலும், கோட்டாறு ரெயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தூரத்திலும், கிழக்கில் கன்னியாகுமரி செல்லும் வழியில் சுசீந்திரம் திருத்தலம் அமைந்துள்ளது.