பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிறகு விடுமுறையைக் கொண்டாடி வரும் நடிகை ஓவியா, சொந்தக் குரலில் பாட வந்த வாய்ப்பை மறுத்துள்ளாராம்.
தமிழில் ‘களவாணி’ படத்தில் நடித்து புகழ் பெற்றவர் ஓவியா. அதன் பிறகு பல படங்களில் நடித்தார். அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் ரசகர்களின் பேராதரவைப் பெற்று புகழின் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் அவருக்கு ஒரு பாடல் பாடும் வாய்ப்பும் வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அவர் நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பலூன் படத்தில் இந்த வார்த்தையை வைத்து ஒரு பாடல் உருவாக்கப்பட்டது. இப் பாடலை பாடுமாறு ஓவியாவுக்கு அழைப்பு விடுத்தார் யுவன். ஆனால் சொந்தக் குரலில் பாட ஓவியா மறுத்துவிட்டாராம்.
இதற்கான பின்னணி குறித்து விசாரித்தபோது, ‘பலூன்’ படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிப்பதுதான் இந்த மறுப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சுந்தர் சி இயக்கிய ‘கலகலப்பு’ படத்தில் ஓவியாவும், அஞ்சலியும் இணைந்து நடித்தனர். படத்தில் நடித்தபோது நட்பு பாராட்டிக்கொண்டாலும் இருவருக்கும் இடையே ஈகோவால் பிரச்னை வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் மோதிக் கொண்டனராம்.
தற்போது ‘பலூன்’ படத்தில் அஞ்சலி நடித்து இருப்பதால் அந்தப் பாடலை பாட அவர் மறுத்து இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.