பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு எதிராகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக் கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளனர் என எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்களது மற்றுமொரு சர்வதேச தினத்தை மனக் கவலைகளோடும் துயரத்தோடும் நாம் எதிர்கொள்கிறோம்.
பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு எதிராகக் காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக் கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளனர்.
கடந்த பல வருடங்களாக காணாமல் போகச் செய்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
தொடர்ந்தும் அத்தகைய ஆர்ப்பாட்டங்களைச் செய்து வருகின்றனர். அவர்கள் கோருவதெல்லாம், தங்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதன் உண்மைகளைக் கண்டறிய வேண்டுமென்பதே.
ஆயுதக் கலவரங்கள் முடிவுக்கு வந்து ஆண்டுகள் எட்டு கடந்து விட்டபோதும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுடைய பிரச்சினைகள் இதுவரை திருப்திகரமான வகையில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்து வருகின்றது.
உலகின் பல்வேறு பாகங்களிலும் இது மிக மோசமான பிரச்சினையாக உருவாகி வருவதாக அங்கத்துவ நாடுகள் உணர்ந்துகொண்டதையடுத்து 2010ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தனது தீர்மானம் ஒன்றினூடாக இப்பிரச்சினைகள் தொடர்பாகத் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தது.
இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களும் பல வருடங்களாகத் தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களாகவும் தொடர்ந்தும் இருந்து வரும் நிலைமை கவலை தருவதாக உள்ளமை கவனிக்கத்தக்கது.
இந்த விடயம் தொடர்பாக தனது உயர்ந்தபட்ச கவனத்தைச் செலுத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.
படையினரிடம் தங்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு அல்லது கடத்தப்பட்டவர்களுக்கு அல்லது காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது மக்களுக்குத் தெரியவர வேண்டும். அது அவர்களது உரிமை. இந்த அடிப்படை உரிமையைக் கவனத்திற் கொள்ளாமல் விடமுடியாது.
மேலும், குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்மாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதோடு, இந்த நாட்டில் எதிர்காலத்திலும் இத்தகைய பலவந்தமாகக் காணாமல் போகச் செய்தல் இடம்பெறாது நிறுத்தப்படுவதையும் உறுதி செய்யுமாறும் கோருகிறோம்.
இந்த நாட்டில், பலவந்தமாக அல்லது சுய விருப்பத்திற்கு மாறாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் செயற்படுத்தப்படுவதனையும் உறுதிசெய்யுமாறும் நாம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.