“புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் எதிரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவின ருக்கு வழங்கிய வாக்குமூலம், நீதிவான் மன்றில் வழங்கிய வாக்குமூலம் மற்றும் தீர்ப்பா யத்தின் குறுக்கு விசாரணை ஆகியவற்றில் தெரிவிக்காத விடயங்களை தமது சாட்சியத்தில் தெரிவிப்பதானது நடக்காதவற்றை நடந்ததாகப் பொய் கூறும் செயற்பாடாகும்” என்று பிரதி மன்றாடியார் அதிபதி பி.குமாரரட்ணம் தீர்ப்பாயத்திடம் உறுதியாக எடுத்துரைத்தார்.
எதிரிகள் தரப்புச் சாட்சியங்கள் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று ஆரம்பமாகின. முதல் 6 எதிரிகளின் சாட்சியங்கள் நேற்று நிறைவடைந்தன. எதிரிகளின் குறுக்கு விசாரணையின் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியாகக் கூறினார்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வின் பின் கோரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் இடம்பெற்று வருகிறது.
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் நேற்றுக் காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தின் 2ஆவது மாடியிலுள்ள திறந்த மன்றில் கூடியது.
வழக்குத் தொடுனர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி பி. குமாரரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நாகரத்தினம் நிஷாந்த், மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
எதிரிகள் தரப்பில் 1ஆம் ,2ஆம் , 3ஆம் , 6ஆம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன மற்றும் சட்டத்தரணி லியகே ஆகியோரும் 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகியிருந்தார்.
பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து எதிர்கள் தரப்புச் சாட்சி பதிவுகள் ஆரம்பமாகின.
எதிரிகள் தரப்பு சாட்சியமாக 9ஆம் எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் மனைவி மகாலக்சுமி சசிக்குமார் மற்றும் குகரூபன் என்போரையும் எதிரிகள் தரப்பு சாட்சியமாக அழைக்க தீர்ப்பாயம் அனுமதியளித்தது.
முதலாம் எதிரி சாட்சியம்
முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் சாட்சிக் கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளித்தார்.“நான் புங்குடுதீவில் 23 வருடமாக வசிக்கின்றேன். கடற்றொழில் செய்து வருகின்றேன். மாணவி கொலை செய்யப்பட்டது சம்பவம் நடந்த மறுநாள் 2015ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதியே எனக்குத் தெரியும். நான் அந்த மாணவியை இரண்டே இரண்டு தடவை தான் நேரில் கண்டுள்ளேன்.
என்னை அந்தப் படுகொலையுடன் தொடர்புடையவர் என ஊர்காவற்துறை பொலிஸார் 14ஆம் திகதி கைது செய்தனர். கைது செய்து, என்னுடைய சேர்ட்டைக் கழட்டி கைகளை பின்புறமாகக் கட்டி கீழே தள்ளி வீழ்த்தி என்னுடைய கால்களை கோபி எனும் பொலிஸ் உத்தியோகத்தர் மிதித்து இருக்க தோள் பட்டையில் மூன்று நட்சத்திரம் உடைய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் என்னை கொட்டனால் தாக்கினார்” என கூறி தீர்ப்பாயம் முன்னிலையில் தன்னைத் தாக்கிய விதத்தை செய்கை மூலம் செய்து காட்டினார்.
இந்த மாணவி கொலை வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மீதான குற்றசாட்டுக்கள் அனைத்தையும் முற்றாக மறுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம் எதிரி சாட்சியம்
இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார்.“நான் புங்குடுதீவில் வசிக்கின்றேன். கடற்றொழில் செய்து வருகின்றேன். கடற்றொழிலுக்குச் செல்லாத சமயங்களில் பனைமரங்களில் ஏறி மட்டை வெட்டுதல் , தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பிடுங்குதல் போன்ற வேலைகளை செய்வேன்.
மாணவி படுகொலை செய்யப்பட்ட மறுநாள் 2015ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி காலையில் நான் வேலைக்கு சென்றுவிட்டேன் மதியம் 1 மணியளவில்தான் வீட்டுக்குச் சென்றேன். அப்போது எனது மனைவி கூறினார் “ பொலிஸ் உங்களை ஆலடிக்கு வர சொல்லிட்டு போறாங்க “ என்று அதனால் நான் அங்கே சென்றேன்.
அங்கே சென்றதும் பொலிஸ் என்னை கைது செய்து அழைத்துச் சென்று எனது முதுக்குக்குப் பின் புறமாக இரண்டு கைகளையும் சேர்த்து விலங்கு மாட்டி என்னை தடிமனான கொட்டாங்களால் அடித்து துன்புறுத்தினார்கள்.என்னிடம் எந்தவிதமான வாக்குமூலங்களையும் பெறாமல் சிங்களத்தில் எழுதிய தாள் ஒன்றில் என்னைக் கையொப்பம் இடச் சொல்லி அடித்தார்கள் அடிதாங்காமல் அதில் என்ன எழுதி இருக்கின்றது என தெரியாமல் அதில் கையொப்பம் இட்டேன்.
பின்னர் என்னிடம் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் சிங்களத்தில் எழுதிய தாளில் கையொப்பம் வாங்கினார்கள். கையொப்பம் வாங்கி சிறிது நேரத்தில் தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம் தமிழில் எழுதிய வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கினார்.
ஆனால் அதில் என்னை எழுதி இருக்கின்றது என்பதனை வாசித்து காட்டவில்லை. என் மீது சுமத்தப்பட்டு உள்ள அனைத்துக் குற்றசாட்டுக்களையும் நான் முற்றாக மறுக்கின்றேன். எனக்கும் இந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தீர்ப்பாயத்தில் கூறினார்.
அதனை அடுத்து வழக்கு தொடுனர் தரப்பில் பிரதி மன்றாடியார் அதிபதி இரண்டாம் எதிரியிடம் குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்தார்.
“உதயசூரியன் சுரேஷ்கரனை (கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்தவர்) எனக்கு தெரியும் ஆனால் பழக்கமில்லை. அடுத்ததாக நடராஜா புவனேஸ்வரன் (மாப்பிள்ளை – கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்தவர்) என்பவரை தெரியும்.
இந்த வழக்கின் 6ஆம் எதிரியான சிவதேவன் துசாந்த் மாணவியை ஒரு தலையாக காதலித்தமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. மாணவியை கடத்தி தருமாறு துசாந்த் என்னிடம் கேட்டதும் இல்லை. அதற்காக எனக்கு 23 ஆயிரம் ரூபாய் பணம் கப்பமாகத் தரவும் இல்லை.
இந்த வழக்கில் உள்ள தவக்குமார் , சந்திரஹாசன் , துசாந்த் ஆகியோருடன் சேர்ந்து நான் மாணவியை கடத்தவும் இல்லை, வன்புணர்வுக்கு உட்படுத்தவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை. எனக்கும் மனைவி பாடசாலைமகள் உண்டு. நான் அவ்வாறான செயலில் ஈடுபட மாட்டேன்.
மாணவியின் படுகொலை மிக கொடூரமாக நடந்துள்ளது. அதனை இராணுவத்தினர் செய்ததாகவே முன்னர் ஊரில் கதைத்தார்கள். இது தொடர்பில் நான் எனது சட்டத்தரணியிடம் கூறி இருந்தேன். ஆனால் வழக்கின் சாட்சியங்கள் பதியப்படும் போது அது தொடர்பில் சட்டத்தரணி எந்த சாட்சியத்திடமும் கேட்கவில்லை.
இந்த வழக்கில் சம்பவ இடத்தில் என்னை காலையில் கண்டதாக சாட்சியம் அளித்த பாலசிங்கம் என்பவர் எனது மைத்துனர். நான் அவரின் தங்கையைத்தான் திருமணம் முடித்துள்ளேன்.
அவரும் எனது மனைவியும் ஒருநாள் என்னை வவுனியா சிறைச்சாலையில் சந்தித்து தம்மை புலனாய்வுத் துறையினர் மிரட்டுவதாகவும் , தமது வாய்க்குள் கைத்துப்பாக்கியை வைத்து பொய் சாட்சி கூறுமாறு மிரட்டுவதாக கூறினார்கள். அதனாலேயேதான் அன்று எனது மச்சான் எனக்கு எதிராக சாட்சியமளித்தார்.
அது தொடர்பிலும் நான் எனது சட்டத்தரணிக்கு கூறி இருந்தேன். அவர் அது தொடர்பில் மன்றில் எந்தச் சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை.
என்னைப் பொலிஸார் தாக்கியது தொடர்பில் அப்போதைய ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் லெனின்குமார் அவர்களிடம் கூறி இருந்தேன். அங்கும் நான் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதனை அடுத்து மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் வழங்கினார்.
“நான் கடற்றொழில் செய்து வருகிறேன். 14 ஆம் திகதி காலை 10 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சில பொலிஸார் என்னைக் கைது செய்தனர்.
பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று ஆடைகளை களைந்து இரண்டரை மணித்தியாலங்களாக அடித்து துன்புறுத்தி சிங்களத்தில் எழுதிய தாளில் கையொப்பம் வாங்கினார்கள். அதேபோலவே புலனாய்வு துறையினரும் சிங்களத்தில் எழுதிய தாளில் கையொப்பம் வாங்கினார்கள்.
நான் இன்னும் திருமணம் செய்யவில்லை. எனக்கு திருமணம் பேசி முற்றாகி இருந்த சமயத்தில்தான் இந்த வழக்கில் என்னைக் கைது செய்தனர் அதனால் திருமணமும் நின்று விட்டது.
எனக்கு கள்ளு குடிக்கும் பழக்கம் நீண்டகாலமாக இல்லை. கள்ளு சீசன் நேரம் மட்டுமே குடிப்பேன். புவனேஸ்வரன் வீட்டுக்கு கள்ளுக் குடிக்க போவதில்லை. மாணவி கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருடத்துக்கு மேலாக அங்கு போறதில்லை.
மாணவியை கடத்தி 23 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை.மாணவி படுகொலை செய்யபப்ட்ட தினமான மே 13ஆம் திகதி நான் எனது சகோதரனான இந்திரகுமாருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு ஒன்று இருப்பதனால், அவரை பஸ்ஸில் ஏற்றிவிட காலை 7.30க்கு சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றேன்.
அதனை படுகொலை செய்யபப்ட்ட மாணவியின் சகோதரன் உள்ளிட்டவர்கள் கண்டார்கள். ஆலடிச் சந்தியில் நின்று காலை 8.20 மணிக்கு அவரை பஸ் ஏற்றிவிட்டேன்” என்று மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் தெரிவித்தார்.
சகோதரனை பஸ் ஏற்றிவிட்ட விடயத்தை இந்த வழக்கில் முதன்முறையாகச் சொல்கிறீர்கள். எனவே நடக்காத விடயத்தை நடந்ததாகப் பொய் கூறுகிறீர்கள் என்று பிரதி மன்றாடியார் அதிபதி எதிரியிடம் கேள்வி எழுப்பினார்.
“இந்தத் தகவல்களை நான் பொலிஸாரிடமும் புலனாய்வு துறையினரிடமும் தெரிவித்து உள்ளேன்.எனது சட்டத்தரணியிடமும் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் அது தொடர்பில் தீர்ப்பாயத்திடம் எதுவுமே தெரிவிக்கவில்லை.
என்னை பொலிஸார் அடித்து துன்புறுத்தல் செய்தமை தொடர்பில் , பொலிஸ் உயர் அதிகாரி , சட்ட மருத்துவ அதிகாரி , புலனாய்வு துறையினர் , ஊர்காவற்றுறை நீதிவான் மற்றும் மேல் நீதிமன்றில் என 5 இடத்தில் கூறியுள்ளேன்.இந்த குற்றத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்தக் குற்றசாட்டுக்களை நான் முற்றாக மறுக்கின்றேன்” என்று மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் தெரிவித்தார் அதனை தொடர்ந்து 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிந்திரன் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் வழங்கினார்.
“நான் தாய்லாந்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறேன். இந்த குற்றத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. முதலில் மாணவியை நான் தான் கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்தேன் என பொலிஸார் கூறினார்கள்.
தற்போது அந்த அந்த குற்றத்துக்கு உடந்தையாக செயற்பட்டமை திட்டம் தீட்டி கொடுத்தமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக மறுக்கிறேன். நான் இந்தக் குற்றச்சாட்டுக்களை செய்யவில்லை. என் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளால் எனது அம்மா இறந்துவிட்டார். எனது வீடு அழிக்கப்பட்டுவிட்டது.
இந்த வழக்கில் எனக்கு எதிராக இதுவரையில் எந்தச் சான்று பொருள்களும் முன் வைக்கப்படவில்லை. சாட்சியங்களும் எனக்கு எதிராக இல்லை சாட்சிகளில் ஒருவர் மட்டும் “மாணவி படுகொலை செய்யப்படுவதற்கு முதல் நாளான மே 12ஆம் திகதி என்னை புங்குடுதீவில் வான் ஒன்றில் கண்டதாகவும், நாங்கள் வானில் இருந்து மாணவி பஸ்ஸில் வந்து இறங்கி செல்வதனைப் பார்த்ததாகவும் சாட்சியமளித்துள்ளார். ஆனால் நான் குற்ற சம்பவத்துடன் தொடர்புள்ளவன் என எவருமே சாட்சியமளிக்கவில்லை.
என்னை 2015ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி புங்குடுதீவில் கண்டதாக சாட்சிய கூறியது பொய். நான் அன்றைய தினம் கொழும்பில் தங்கியிருந்தேன். அதற்கு நான் உணவு வாங்கிய யாழ். ஹோட்டல் சிசிரிவி கமராப் பதிவு உள்ளது. அதனைப் பெறுவதற்கு அந்தக் ஹோட்டல் உரிமையாளரிடம் கோரினோம். ஆனால் கிடைக்கவில்லை. சாட்சியமளிக்க அவரை அழைத்த போதும் அச்சத்தால் அவர் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்” நான்காம் எதிரியான என்று சசிதரன் சாட்சியமளித்தார்.
12ஆம் திகதி நீங்கள் கொழும்பிலிருந்ததாக நீதிவான் நீதிமன்றிடமோ, தீர்ப்பாயத்தில் நடந்த குறுக்கு விசாரணையிலோ தெரிவிக்கப்படவில்லை. எனவே நடக்காத ஒன்றை நடந்ததாகப் பொய் கூறவே இந்த விடயத்தை தற்போது கூறுகின்றீர்கள் என்று பிரதி மன்றாடியார் அதிபதி எதிரியிடம் கேட்டார். இந்த விடயத்தைச் சொல்வதற்கு தற்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று எதிரி பதிலளித்ததார்.
கடற்படையினரேமாணவியைக் கொன்றது
“இந்தக் கொடூரச் சம்பவத்தை கடற்படையினரே செய்தனர். இந்தச் சம்பவத்துக்கு முன்பதாக இரு பெண்கள் இதே போன்றே படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் படுகொலைகளுக்கு கடற்படையினரே கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் செய்த குற்றத்தை மறைப்பதற்காகவே எம்மைக் கைது செய்துவிட்டு புங்குடுதீவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது” என்றும் நான்காம் எதிரியான சசிதரன் சாட்சியமளித்தார். ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் சாட்சியமளித்தார்.
“நான் கடற்றொழில் செய்பவன். இந்தக் கொலையுடன் எனக்கு எதுவிதத் தொடர்பும் இல்லை. இவ்வாறு ஒரு சம்பவம் நடப்பதைக் கண்டிருந்தால் அதனைச் செய்தவர்களை துண்டம் துண்டமாக வெட்டிப் போட்டிருப்பேன்.கொலை நடைபெற்ற தினத்தன்று என்னை சம்பவ இடத்துக்கு அருகே என்னை சாறத்துடன் கண்டதாக பெண்ணொருவர் சாட்சியமளித்திருந்தார்.
அவர் பொய் கூறுகின்றார். அவருக்கும் எனக்கும் இடையே முரண்பாடு உள்ளது. அது தொடர்பில் அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் ஆலடிப் பகுதியில் என்னை வான் ஒன்றுக்குள் கண்டதாகவும், அதற்குள் சுவிஸ்குமாரும் இருந்ததாகவும் சாட்சி ஒருவர் கூறினார். அதுவும் பொய்” என்று 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் சாட்சியமளித்தார்.
மே 12ஆம் திகதி ஆலடியில் வான் ஒன்றில் உம்மைக் கண்டதாகச் சாட்சியமளித்தவருக்கும் உமக்கும் இடையேயும் முரண்பாடு உண்டா? என தீர்ப்பாயம் கேள்வியெழுப்பியது. எதிரி இல்லை எனத் தெரிவித்தார்.ஆறாம் எதிரியான சிவதேவன் துசாந்த் சாட்சியமளித்தார்.
நான் வேலணைப் பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகத்தில் வெளிக்களத் தொழிலாளியாகப் பணியாற்றுகின்றேன். நான் வித்தியாவை ஒருதலையாகக் காதலித்ததாகக் கூறுவது பொய்யானது. நான் எனது மச்சாளையே காதலித்தேன். என்னை இந்த வழக்கில் கைது செய்ததால் அவர் வேறொருவரைத் திருமணம் செய்துவிட்டார்.
எனது வீட்டிலிருந்து வித்தியாவின் மூக்குக் கண்ணாடி எடுத்தமையும் பொய்யான குற்றச்சாட்டு. அதனை எனக்கு முன்பாகவே வைத்துவிட்டு சிஐடியினர் எடுத்தனர். சம்பவ தினத்தன்று என்னால் அது வைக்கப்பட்டிருந்தால் எனது வீட்டுக்குத் தீ வைத்த போது அது எரிந்திருக்கும்” என்று ஆறாம் எதிரியான சிவதேவன் துசாந்த் சாட்சியமளித்தார்.
“மூக்குக் கண்ணாடி மீட்கப்பட்ட இடம் எரிந்த நிலையில் காணப்பட்டமை தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்ற குறுக்கு விசாரணையில் உங்கள் சட்டத்தரணியால் தெரிவிக்கப்படவில்லை.. தற்போது அதனைக் கூறுவது நடக்காததை நடந்ததாகக் கூறும் பொய்யான சாட்சியமாகும்” என்று பிரதி மன்றாடியார் அதிபதி எதிரியிடம் கேள்வியெழுப்பினார்.
சட்டத்தரணியிடம் இதுபற்றிக் கூறியிருந்தேன். ஆனால் அவரால் இந்த விடயம் கேட்கப்படவில்லை என்று எதிரி கூறினார்.
முதல் ஆறு எதிரிகளின் சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்தன. இன்று 7ஆம் 8ஆம் 9ஆம் எதிரிகளின் சாட்சியப் பதிவுகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.