கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா நேற்று 33 தலித் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து வந்து விருந்தளித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி சித்தராமையா, எடியூரப்பா செய்வது அரசியல் நாடகம் என கூறியுள்ளார்.
எடியூரப்பா அளித்த விருந்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து சித்தராமையா கூறியதாவது:-
தலித் குடும்பத்தினருக்கு உதவி செய்வதாக இருந்தால் அவர் முதல்வர் பதவியில் இருக்கும் போது செய்திருக்க வேண்டும். மக்களின் குறைகளை நேரில் சென்று ஏன் விசாரிக்க வில்லை? அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஏன் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஒரு தலித் தலைவருக்காவது நல்ல இலாகாவை வழங்கியதுண்டா?
இவை எல்லாம் அரசியல் நாடகங்கள். 2018-ம் ஆண்டில் நடைபெறும் தேர்தலில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்கிறார். ஆனால், மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.