முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துமூல எதிர்பை சமர்ப்பிப்பதற்கு நீதிமன்றம் திகதி குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இந்த எதிர்ப்புகளை, எதிர்வரும் 4ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜீவ நிசங்க உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும், எழுத்துமூல எதிர்பை, ஓகஸ்ட் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், இரு தரப்பினரும் கால அவகாசம் வேண்டும் என கோரிய நிலையில், எதிர்வரும் செப். 4ஆம் திகதி எதிர்பை சமர்ப்பிப்பதற்கு நீதிமன்றம் திகதி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவால், கட்சியின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், மத்திய குழுவை முறையாக கூட்டாமல் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, கே.டீ. அருன பிரியஷாந்த, மத்தேகொட அசங்க நந்தன ஆகியோரால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவில் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பிரதிவாதியின் பெயர் சரியாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் இந்த வழக்கைக் கொண்டு செல்ல முடியாது என்றும் வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறும் கோரி, அநுர பிரியதர்ஷன யாப்பா சார்பில் ஆஜரான சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக, இருதரப்பினரதும் எழுத்துமூல எதிர்ப்புகளைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம், குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.