வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இருந்தது.
இரு அணிகள் மோதும் 5 ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா முதல் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது. முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி கொழும்பில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணியின் வெற்றி இந்த ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். இந்தப் போட்டியிலும் வென்று 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது.
தொடரை வென்று விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் வீராட்கோலி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
ரகானே, மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகிய 4 வீரர்களுக்கு இதுவரை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் அவர்களில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஒயிட்-வாஷ் முனைப்பில் இருப்பதால் இந்திய வீரர்கள் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்த போராடுவார்கள். டோனி, ரோகித்சர்மா பேட்டிங்கிலும், பும்ரா பந்துவீச்சிலும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததால் இலங்கை வீரர்கள் நெருக்கடியில் உள்ளனர். அந்த அணி 2 போட்டியில் போராடியே வீழ்ந்தது. இதனால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும். கேப்டன் கபுகேந்தரா காயம் அடைந்ததால் ஆடுவது சந்தேகமே. அவர் ஆடாவிட்டால் மலிங்கா கேப்டனாக இருப்பார்.
இரு அணிகளும் நாளை மோத இருப்பது 154-வது போட்டியாகும். இதுவரை நடந்த 153 போட்டியில் இந்தியா 86-ல் இலங்கை 55-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. 11 ஆட்டம் முடிவு இல்லாமல் ஆனது.
பகல்-இரவாக நடை பெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் மற்றும் தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), தவான், ரோகித்சர்மா, ராகுல், கேதர் ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், பும்ரா, யசுவேந்திர சஹால், ரகானே, மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர்.
இலங்கை: கபுகேந்திரா (கேப்டன்), திரிமானே, டிக்வெலா, குஷால் மெண்டீஸ், மேத்யூஸ், ஸ்ரீவர்த்தனா, தனஞ்செயா, சமீரா, பெர்னாண்டோ, மலிங்கா, ஹசரன்கா, திஷாரா பெரைரா, புஷ்பக்குமாரா, சன்டசன், குனதிலகா.