எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குப் பின்னரும் தேசிய அரசில் அங்கம் வகிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவே முடிவெடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசிய அரசை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகின்றது.
இந்நிலையில், தேசிய அரசிலிருந்து வெளியேறுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
எனவே, குறித்த ஒப்பந்தம் நீடிக்கப்படுமா அல்லது அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இருதரப்பினருமே இவ்வாறான கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். (அரசிலிருந்து விலகுவது சம்பந்தமாக) தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை எந்தவொரு கட்சிக்கும் இல்லை.
இரு கட்சிகளிடையே பிரிவு ஏற்பட்டால் மறுபடியும் கூட்டணி அல்லது இணக்க அரசையே உருவாக்க வேண்டும்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த முடிவின் பிரகாரமே தேசிய அரசில் 2017 டிசம்பர் மாதம் வரை அங்கம் வகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
ஆகவே, டிசம்பர் மாதம் முடிவடைந்ததும் தொடர்ந்தும் இருப்பதா, இல்லையா என்பதை கட்சியின் மத்திய செயற்குழுவே முடிவெடுக்கும்.
கட்சியின் 66ஆவது மாநாடு முடிடைந்த பின்னர் மத்திய குழு கூடி இது சம்பந்தமாகக் கலந்துரையாடப்படும். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தான் தேசிய அரசில் அங்கம் வகிக்கின்றது.
நான் ஜனாதிபதி. எனவே, எவர் வந்தாலும், போனாலும் ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேசிய அரசு 2020 வரை தொடரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு ஜனாதிபதி ஆம், நம்பிக்கை இருக்கின்றது என்று பதிலளித்துள்ளார்.
இதேவேளை, தாங்கள் பதவிக்கு வரும் போது இரண்டாவது தடவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க மாட்டீர்கள் என உறுதி வழங்கி விட்டே வந்தீர்கள்.
ஆனால், நீங்கள் இரண்டாவது முறையாகவும் போட்டியிடவுள்ளீர்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். ஆகவே, முன்னைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றீர்களா? இல்லை நிலைப்பாடு மாறியுள்ளதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவ்வாறு கூறவில்லை. நானும் சொல்லவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு மஹிந்த அணியான பொது எதிரணியுடன் அரசியல் செய்யும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி ஜனாதிபதியிடம் கேட்டபோது,
கட்சிக்கு எதிராகவும் அதன் கொள்கைக்கு முரணாகவும் செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கைக் குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதில் வழங்கியுள்ளார்.