ஜப்பான் நாட்டின் மீது மேற்கொண்ட ஏவுகணை சோதனை ஆரம்பம்தான் என்று வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.
வாசோங்- 12 எனும் அந்த ஏவுகணை மிகவும் தாழ்வாகப் பறந்து 2,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, ஜப்பானின் கிழக்கு கடல் எல்லையில் இருந்து 1,180 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று கடலில் விழுந்தது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா தற்போது நடத்திவரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு நேரடி பதில் என்றும், 1910-ஆம் ஆண்டு ஜப்பான்- கொரியா உடன்படிக்கை மூலம் கொரிய தீபகற்பத்தை ஜப்பான் இணைத்துக்கொண்ட ஆண்டு விழாவை அனுசரிக்கும் விதமாகவும் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணை தான் பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வடகொரியா கூறியுள்ளது.