யுத்தத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள தமக்கு, கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு கட்டடத்தை கட்டித்தர வேண்டுமென கிழக்கு மாகாண சிறுமிகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
கரடியனாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரியை பழுகாமம் கண்டுமணி வித்தியாலய ஆரம்பப் பிரிவில் கல்விகற்கும் சிறுமிகள், நடனம் மூலம் வரவேற்றனர்.
குறித்த வரவேற்பு நடனத்தின் பின்னர் இச்சிறுமிகள், தமது பாடசாலைக்கு கேட்போர் கூடமொன்றை கட்டித்தருமாறும், தாம் எதிர்நோக்கும் குறைபாடுகள் தொடர்பாகவும் விரிவாக எழுதிய கடிதமொன்றை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, தமது உரையின் போது பொதுமக்களுக்கு அதனைக் காட்டியதோடு, அச் சிறுமிகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இச் சம்பவம் அங்குள்ள பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.