உடலின் ஆரோக்கியமான செயல்திறனுக்காக, ஹார்மோன் மாற்றங்களால் நிகழ்வதே தூக்கம். இந்நிகழ்வு நடக்காமல் போவதே தூக்கமின்மை.
தூக்கமின்மை வரக் காரணம்?
மன அழுத்தமே முக்கிய காரணம். அதோடு மாறி வரும் வழ்க்கை முறை, உணவுப் பழக்கம், பணியிட நெருக்கடி, கவலை, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வுகளும் காரணம். உடல் உறுப்பில் ஏதேனும் வலி இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும்.
தூக்கமின்மையின் அறிகுறிகள்?
அதிகாலையிலேயே விழிப்பது , தூக்கத்திற்குப் பின்னும் அசதியாக இருப்பது, சோர்வாக உணர்தல், எரிச்சலான மனநிலை, எதிலும் கவனமின்மை மற்றும் ஆர்வம் குறைந்த நிலை, தலைவலி, செரிமானக் கோளாறுகள் தூக்கமின்மையின் அறிகுறிகள்.
தூக்கம் உடலுக்கு அத்தியாவசியத் தேவையா?
தூங்கும்போது, மூளையில் மெலோடனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதனால், உடல் தசைகள், எலும்புகள் மட்டுமின்றி மனநலமும் காக்கப்படுகின்றது. தூக்கத்தால் உடல் சோர்வு, மனச் சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.
நீண்ட நாட்களாக ஒருவர் தூக்கமின்மையில் இருந்தால், வரும் பாதிப்புகள் என்ன?
மூளைக்கும் உறுப்புகளுக்குமான தகவல் தொடர்பு சிதையும். அதிகப்படியான தசைச் சோர்வு, கை கால்களை அசைக்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். செரிமான மண்டலம் பாதிக்கப்படுகிறது. எரிச்சலுடன் பேசுவது, காதுகளில் கற்பனை ஒலிகள் கேட்பது, ஞாபக மறதி போன்றவையும், தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்தான்.
குறுகியகால தூக்கமின்மைக்கும் நீண்டகால தூக்கமின்மைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
2 வார காலத்திற்கும் மேலாக தூக்கம் இல்லாமல் இருப்பது, குறுகிய கால தூக்கமின்மை. இதை எளிதில் குணப்படுத்திவிடலாம். தூக்கமின்மை 1 மாத காலத்திற்கும் மேல் நீடித்தால், அது நீண்டகால தூக்கமின்மை. இப் பாதிப்பில் உள்ளவர்களுக்கு மனச் சோர்வு நோய் இருக்கும்.எந்நேரமும் அர்த்தமில்லாத பயத்தில் தவிப்பர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எவ்வளவு தூக்கம் தேவை?
அ) பச்சிளம் குழந்தை 3 மாதம் வரை- 15 மணி முதல் 18 மணி வரை
ஆ) நடை பழகும் குழந்தைகளுக்கு- 14 மணி
இ) 3-8 வயது குழந்தைகள் வரை-16 மணி
ஈ) 5 வயது குழந்தைகள்-13 மணி
உ) 10 வயது குழந்தைகள்- 11 மணி
ஊ) 10-17 வயது வரை-9 மனி
எ) பெரியவர்கள்- 7-8 மணி
* புகைப் பழக்கம் எவ்வாறு தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது?
புகையிலையில் இருக்கும், ‘நிகோட்டின்’ தூக்கத்திற்கு முதல் எதிரி. இது புகை வழியாக, ரத்தத்தில் கலந்து, மூளையை அடைந்து, சில மணி நேரங்களுக்கு மூளையை தூங்கவிடாமல் செய்வதால், தூக்கமின்மை ஏற்படுகின்றது.
மது அருந்துபவர்கள், அதை அருந்தியவுடன் தூங்கி விடுகின்றனரே; இவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுமா?
மது அருந்துவதால் ஏற்படுவது மயக்கம்தானே தவிர , தூக்கம் இல்லை. மதுவிலுள்ள, ‘எத்தில் ஆல்கஹால்’ மூளையின் நுண் நரம்புகளை சேதமடையச் செய்து, மூளையை செயற்கையாக முடக்கிவிடுகிறது. மது அருந்துபவர்களுக்கு கட்டாயம் தூக்கமின்மை ஏற்படும்.
தூக்கமின்மைக்கான மருத்துவ தீர்வுகள் என்னென்ன?
மூளையில் ஏற்படும் ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வினால், மனச் சோர்வு, மனப் பதற்றம் போன்றவை ஏற்படுகின்றன.இதற்கு, உளவியல் சிகிச்சை மூலம், மூளையில் சுரக்கும் ஹார்மோன்களை சமன் செய்வதன் மூலம், சரி செய்யலாம். உடல் நலக் கோளாறு காரணம் என்றால், அதற்குண்டான சிகிச்சை செய்தாலே, தூக்கமின்மையைப் போக்கலாம்.